×

நவராத்திரி விழா தொடக்கம்: குமரியில் கோயில்கள், வீடுகளில் கொலு வைத்து பூஜை... 7ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டம்

நாகர்கோவில்: நவராத்திரி விழா தொடங்கியதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்கள், வீடுகளில் கொலு வைத்து பூஜைகள் தொடங்கின. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா இன்று (29ம்தேதி) தொடங்குகிறது. இந்த விழாவின் 9 வது நாள் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. விழாவின் 10வது நாள் விஜயதசமி ஆகும். அதன்படி வருகிற 7ம் தேதி ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையும், 8ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா நடக்கும் 9 நாட்களிலும் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும்.

முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரியின்போது பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பதாகும். அதன்படி இன்று காலை முதல் வீடுகளில் கொலு வைத்து பூஜைகள் தொடங்கினர். 3 முதல் 9 படிகள் என அவரவர் வசதிக்கு ஏற்ற படி அமைத்து, கொலு பொம்மைகளை அலங்கரித்து வைத்து இருந்தனர்.

தசாவதாரம், திருமணம், அறுபடை வீடு, அஷ்டலஷ்மி, ஆண்டாள் திருமஞ்சனம், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, விஸ்வரூபம், சீமந்தம் செட் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என வகைவகையான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு இருந்தன. இன்று முதல் 9 நாட்களும் பூஜைகள் நடத்தி கொலு வழிபாடு நடத்துவார்கள். அக்கம் பக்கத்தினரை அழைத்து மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் குங்கும சிமிழ், ஜாக்கெட் துணிகள், சிறிய அளவிலான பாத்திரங்களை 9 நாட்களும் வழங்குவார்கள். நவராத்திரியையொட்டி கோயில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில், வடசேரியில் உள்ள காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டு இருந்தன. காலையிேலயே கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி  பகவதி அம்மன் கோயிலில்  நவராத்திரி விழா இன்று தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகமும், 6 மணிக்கு அம்மன் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளும்  நிகழ்ச்சியும் நடந்தது.

கொலு மண்டபத்தில் வீற்றிருந்த அம்மனை ஏராளமான  பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வழிப்பட்டனர். பகவதியம்மன் கோயில்  பக்தர்கள் சங்கம் சார்பில் கொலுமண்டபத்தில் கொலு பொம்மைகள்  வைக்கப்பட்டிருந்தன. பின்னர் காலை 9.30 மணிக்கு பஜனை, மதியம் 12 மணிக்கு  அன்னதானம் நடைபெற்றது. மாலை 6  மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு  அம்மன் வெள்ளி கலைமான்  வாகனத்தில் கோவிலை சுற்றி பவனி வருதல் போன்றவை  நடக்கிறது.
 விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம்,  அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு, பஜனை,  அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில்  கோவிலை சுற்றி பவனி வருதல், இன்னிசை  கச்சேரி ஆகியவை நடக்கிறது.

விழாவின்  இறுதி நாளான 8ம் தேதி மதியம் 12  மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில்  இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில்  மகாதானபுரம் நோக்கி வேட்டைக்கு  ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி  நடக்கிறது. ஊர்வலம் சன்னதி தெரு,  தெற்குரதவீதி, மேலரதவீதி, பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம், தங்க  நாற்கரசாலை  ரவுண்டானா சந்திப்பு வழியாக மகாதானபுரத்தில் உள்ள வேட்டை  மண்டபத்தை சென்று  அடைகிறது. அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

Tags : Navratri Festival: Arms pooja celebration ,pooja celebration , Pooja with Navratri Festival, Kumari and Kolu
× RELATED எஸ்.ஏரிப்பாளையத்தில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை