×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம்: பிரம்மோற்சவ நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும்: தேவஸ்தான நிர்வாக அதிகாரி பேட்டி

ஆந்திர பிரதேசம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இன்றிரவு அங்குரார்ப்பணம் நடக்கிறது. முன்னதாக ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமியின், சேனாதிபதியான விஷ்வசேனர் கோயிலில் இருந்து வசந்த மண்டபத்திற்கு ஊர்வலமாக வருவார். பின்னர் கோயில் அர்ச்சகர்கள் தூய்மை மண்ணை கோயிலுக்கு கொண்டு வந்து யாக சாலையில் 9 பானைகள் வைத்து நவதானியங்கள் செலுத்தி முளைகட்டும் பூஜையான அங்குரார்ப்பணத்தை செய்ய உள்ளனர்.

பிரமாண்ட நாயகனின் பிரம்மோற்சவத்திற்காக சுவாமியின் வாகனமான கருடனின் உருவம் புதிய மஞ்சள் துணியில் வரையப்பட்ட கொடியை நாளை மாலை நான்கு மாடவீதியில் உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க மாலை 5.23 மணி முதல் 6 மணிக்குள் தங்க கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டுவஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார். இதைதொடர்ந்து முதல் உற்சவமாக பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் பவனி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 2வது நாள் காலை சிறிய சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 3வது நாள் காலை சிம்ம வாகனம்,

இரவு முத்துப்பந்தல் வாகனம், 4வது நாள் காலை கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபாள வாகனம், 5வது நாள் காலை மோகினி அவதாரம், இரவு முக்கிய உற்சவமான தங்க கருட சேவை, 6வது நாள் காலை அனுமந்த வாகனம், மாலை தங்க ரதம், இரவு யானை வாகனம், 7வது நாள் காலை சூரிய பிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 8வது நாள் காலை ரத உற்சவம், இரவு கல்கி அலங்காரத்தில் தங்க குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் 9வது நாள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. அன்று இரவு பிரம்மோற்சவ கொடி இறக்கப்படுகிறது. இது தொடர்பாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் பேசுகையில்; சமூக விரோத செயல்கள் எதுவும் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

திருமலை முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. 8 ஆயிரத்து 400 வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான பார்க்கிங் வசதி திருப்பதி மலையில் செய்யப்பட்டுள்ளது; கூடுதலான வாகனங்களை அடிவாரத்திலுள்ள அலிபிரியில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பக்தர்களின் வசதிக்காக 45 டாக்டர்களை கொண்ட ஆறு தற்காலிக மருத்துவமனைகள் மாடவீதிகளிலும், பக்தர்கள் கூடும் முக்கிய இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்றும் பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.


Tags : Devasthan ,Tirupati Ezhumaliyan Temple ,Free Darshanam ,Executive Officer ,Darshanam ,Thirupathi Ezhumalayaan Temple , Tirupati, Brahmotsavam, free vision
× RELATED புதிய முகநூல் பக்கத்தை துவக்க...