×

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பூட்டி கிடக்கும் தாய்மார் பாலூட்டும் அறை

* விசாரித்தவருக்கு அதிகாரி கிண்டல் பதில்
* நடவடிக்கை கேட்டு கலெக்டருக்கு மனு


மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை கடந்த பல நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட வழியின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் கருங்கலை சேர்ந்த எட்வின் ஜோஸ் என்பவர் ேநற்று தனது மனைவி மற்றும் பிறந்து 48 நாட்களே ஆன கைக்குழந்தையை திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு மார்த்தாண்டம் பஸ் நிலையம் வந்தார்.

அப்போது குழந்தை பசியால் அழுதது. உடனடியாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அவர் தனது மனைவியுடன் பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறைக்கு சென்றனர்.  ஆனால் அங்கு பாலூட்டும் அறை பூட்டப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் அருகில் உள்ள கடையில் விசாரித்தனர். அப்போது கடைக்காரர் பாலூட்டும் அறை கடந்த சில வாரங்களாகவே பூட்டியே கிடக்கிறது என கூறினார். இதையடுத்து எட்வின் ஜோஸ் உடனடியாக குழித்துறை நகராட்சி அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் அந்த அறைக்கான சாவி தற்போது யாரிடம் உள்ளது என தெரியாது என்று அலட்சியமாக கூறியுள்ளார். மேலும் அவசியம் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும் என்றால் குழித்துறை நகராட்சி அலுவலகத்திற்கு வாருங்கள். அங்கு வைத்து குழந்தைக்கு பாலூட்டலாம் என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். இதனால் எட்வின் ஜோஸ் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த தம்பதி கடும் மன உளைச்சலுக்கு ஆளானது. பின்னர் பயணிகள் சிலரின் அறிவுரைப்படி தனது மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு அரசு பஸ்சில் வைத்து குழந்தைக்கு பாலூட்ட செய்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. குழித்துறை நகராட்சி ஊழியரின் அலட்சியமான இந்த செயல் மற்றும் பதில் குறித்து எட்வின் ஜோஸ் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் அலட்சியமாகவும், நக்கலாகவும் பதில் கூறி எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய குழித்துறை நகராட்சி ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

Tags : mothers lactation room ,bus station ,Marthandam , Marthandam Bus Station, Nursery Room
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்