×

வள்ளியூரில் மந்தகதியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி: குடியிருப்பு முன் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரகேடு

வள்ளியூர்: நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக வள்ளியூர் திகழ்கிறது. சுற்று வட்டார மக்கள், பல்வேறு பணி நிமித்தமாக வள்ளியூர் வந்துசெல்கின்றனர். கூடங்குளம்- திருச்செந்தூர் பகுதிகளுக்கு வள்ளியூர் கிழக்கு ரயில்வே கிராசிங் பகுதியை கடந்து செல்லவேண்டி உள்ளது. ரயில்கள் வரும்போது கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் அவதிக்கு உள்ளான மக்கள் சுரங்கபாதை அமைக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.4.8 கோடியில் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் தனியார் நிறுவனம் இதற்கான பணியை துவக்கியது.

இதையொட்டி தற்காலிக சாலையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தரைத்தளம் சாலை அமைக்க தமிழக பொதுப்பணித்துறை ரூ.12 கோடி அளித்தது. அதன்பேரில் ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டது. இருப்பினும் மந்தகதியில் நடைபெறும் பணிகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் 3 கி.மீ. சுற்றி தெற்கு வள்ளியூர் வழியாக செல்லவேண்டியுள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனிடையே தற்போது ஆட்டோக்களும் இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதியளித்திருந்தனர். அந்த பாதையும் தற்போது பெய்து வரும் மழையினால் மண் சரிந்து இடிந்து விழுந்தது.

இதனால் அப்பாதையில் பள்ளமான பகுதியில் மழை நீர் சாக்கடை போல் தேங்கியுள்ளது. இதனால் வள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு பண்டிதர் தெரு குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் தேங்கி மிகந்த துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதுகுறித்து வள்ளியூரில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் நேரில் சென்று கூறியபோதும் நடவடிக்கை இல்லை. தற்போது இடிந்து விழுந்த மண் பாதையில் இருசக்கர வாகனஒட்டிகள் பாதுகாப்பற்ற முறையில் சாகச பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, அதிகாரிகள் தனிக்கவனம் ெசலுத்துவதோடு மந்தகதியில் நடைபெறும் ரயில்வே சுரங்கபாதை பணியை விரைந்து முடிக்கவும், தற்காலிக பாதையை நேர்த்தியாக அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags : slum ,Valliyur slum , Valliyoor, Railway Tunnel Work
× RELATED குப்பை கொட்டுவதில் தகராறு; கல்லூரி...