×

பழநி, திருச்செந்தூர் கோயிலை தொடர்ந்து மீனாட்சி, ராமேஸ்வரம் கோயிலுக்கு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்

மதுரை:  பழநி, திருச்செந்தூர் கோயிலை தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன், ராமேஸ்வரம் கோயிலுக்கும் ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் இந்து சமயஅறநிலைத்துறையின் கீழ் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை மற்றும் உதவி கமிஷனர்கள் தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக  இக்கோயில்களில் புதிய பணியாளர்கள் நியமனம், பராமரிப்பு பணியில் தொய்வு, பாதுகாப்பில் குளறுபடி, பல ஆயிரம் கோடி மோசடிகள் என அடுத்தடுத்து குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.  மதுரை மீனாட்சியம்மன் கோயில்,  உட்பட மிகப்பெரிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் பக்தர்களுக்கு கழிப்பறை, தங்கும் வசதி, பார்க்கிங் வசதி, குடிநீர் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் கூட செய்யப்படாமல் உள்ளது.

இவற்றை கோயிலில் வரும் வருமானத்தில் உபரி நிதியை கொண்டு செய்யவேண்டும்.  மேலும் கல்வி, ஏழைகளுக்கு திருமணம், இல்லாதவர்களுக்கு உணவு, உடை, தங்க இடம்  போன்றவைக்கும், ஆன்மிக திட்டங்களுக்கும் இந்த நிதியை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதிகாரிகள் இந்த நிதியை சொகுசு கார், மின் கட்டணம், அலுவலக செலவு என தங்கள் தேவைகளையே பூர்த்தி செய்வதாக புகார் எழுந்துள்ளது.  இவர்களின் தேவைக்கான செலவு தொகையை அரசு நிதி ஒதிக்கீடு செய்யும். ஆனால்  உபரி தொகையை வைத்து செலவு செய்கின்றனர். உபரி தொகையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கோரி கோயில் கமிஷனர்  உத்தரவிட்டும்,  கீழ் உள்ள அதிகாரிகள் அதனை செயல்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தற்போது பழநி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் இணை கமிஷனராக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதேபோல் மதுரை மீனாட்சியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் என  பல கோயில்களுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஐஏஎஸ் அதிகாரிகள் கோயில் நிர்வாகத்தை சிறப்பாக செய்வார்கள் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும்  பணியாளர்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்த்துள்ளனர். எனவே மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இணை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை  வலுத்துள்ளது.

இதுகுறித்து கோயில் சங்கங்களின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. ராமேஸ்வரம் கோயில் தீர்த்தம் வழங்குவதில் முறைகேடு, மோசடிகள் நடந்து  வருகிறது. இதனை சரிசெய்ய வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தங்கும் அறைகள் அனைத்தும் இடித்து அகற்றப்பட்டுள்ளன. இதனால்  பக்தர்கள் தங்கும் இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டு 20 மாதங்கள் கடந்தும் அதனை புதுப்பிக்கும் பணிகள் துளி கூட நடக்கவில்லை. கும்பாபிஷேகம் பணிகளும்  துவங்கப்படாமல் உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் 10 ஆண்டு காலமாக புதிய பணியாளர்கள் நியமனம் இல்லாமல், இருக்கும் ஊழியர்கள் கூடுதல் பணியால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, விரைவில் மதுரை  மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பெரிய கோயில்களுக்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமிப்பதுடன், சிறப்பு  திட்டங்களையும், உரிய பணியாளர்கள் நியமனத்தையும் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

Tags : Thiruchendur Temple ,Palani ,Meenakshi ,Rameswaram Temple Palani ,Rameswaram Temple , Palani, Thiruchendur Temple to be followed by Meenakshi, Rameswaram Temple
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது