உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

குலசேகரன்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகேயுள்ள குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா. இங்கு இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

இந்தத் தசரா திருவிழா இன்றிலிருந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று கொடியேற்றம் நடைபெற்றதும் லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டி 10 நாள்கள் விரதம் இருப்பார்கள். இந்தத் தசரா திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 08.10.19 அன்று இரவு குலசை கடற்கரையில் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருவார்கள். திருமணத் தடை, நோய்கள் நீங்க, குழந்தை பேறு வேண்டி என பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை விநாயகர், முருகன், காளி, குறவன் குறத்தி, போலீஸ், பைத்தியம் என விதவிதமான வேடங்கள் அணிந்து கொள்வார்கள்.

வேடமணிந்த பக்தர்கள் தங்களது தான் என்ற அகங்காரத்தை விட்டுவிட்டு தனியாகவோ அல்லது குழுவாகவோ பொதுமக்களிடம் சென்று தர்மம் எடுப்பர். இப்படி 10 நாட்களும் எடுத்த தர்மத்தில் சேர்ந்த பணத்தை சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் கோயிலில் உள்ள உண்டியலில் செலுத்துவார்கள். அதனைத்தொடர்ந்து தங்களது 10 நாள் விரத, காப்பை கழட்டுவார்கள். இந்தத் தசரா திருவிழாவை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.

Tags : World ,Kulasekaranpattinam Mutharamman Temple Dasara Festival ,Mutharamman Temple ,Dasara Festival ,Kulasekaranpattinam , World famous, Kulasekaranpattinam, Mutharamman Temple, Dasara Festival
× RELATED உலகின் மிகப்பெரிய மலர்