×

கட்டமைப்பு இல்லாத கோவை ரயில் நிலையம் திணறும் பயணிகள்: அலட்சியத்தில் அதிகாரிகள்

கோவை: கோவை ரயில் நிலையத்தில் எவ்வித கட்டமைப்பு வசதிகளும் இல்லாத காரணத்தால் பயணிகள் திணறுகின்றனர். அதிகாரிகள் அலட்சியப்போக்கை கடைப்பிடிக்கின்றனர். கோவை ரயில் நிலையத்தின் மூலமாக ஆண்டிற்கு சுமார் 150 கோடி ரூபாய் வருவாய் பெறப்படுகிறது. கோவையில் இருந்து கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கு அதிகளவு ரயில்கள் சென்று வருகிறது. கோவை ரயில் நிலையத்தில் 6  பிளாட்பாரம் உள்ளது. சுமார் 50 ஆண்டாகியும், ரயில் நிலையத்தில் எந்த விரிவாக்க பணியும் நடக்கவில்லை. போதுமான இடவசதி இல்லாததால் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாத நிலையிருக்கிறது. கடந்த 4 ஆண்டு காலத்திற்குள்  சுரங்க நடைபாதை, எஸ்கலேட்டர் வசதி அமைக்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பாரத்தில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி நடக்கிறது.

 கோவை ரயில் நிலைய வளாகத்திற்குள் பயணிகள் சென்று வர, போதுமான இடவசதி கிடையாது. குறிப்பாக, ரயில் நிலைய முகப்பு பகுதியில் வாகனங்கள் நிறுத்த இட பற்றாக்குறை இருக்கிறது. பிளாட்பார பகுதியில் கூரைகள் பழுதடைந்து  கிடக்கிறது. பயணிகள் காத்திருப்பு அறைகள் உள்ள கூரை கீழே விழும் நிலையில் இருக்கிறது. டிக்கெட் கவுன்டர்கள் பற்றாக்குறையும் உள்ளது. பயணிகள் வருகைக்கு ஏற்ப, டிக்கெட் கவுன்டர்களின் எண்ணிக்கை இல்லை. காலை, மாலை  நேரத்தில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. தானியங்கி டிக்கெட் விற்பனை மையமும் அடிக்கடி இயங்குவதில்லை. டிக்கெட் கவுன்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயணிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கோவையில் இருந்து செல்லும் பாசஞ்சர் ரயில்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக, கோவை-சேலம் பாசஞ்சர், ஈரோடு பாசஞ்சர், நாகர் கோவில் பாசஞ்சர் ரயில்கள் பகுதி மற்றும் முழு அளவில் ரத்து  செய்யப்பட்டு வருகிறது. கோவை-சேலம் மார்க்கத்தில் ரயில் பாதை சீரமைப்பு பணி காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டாகியும் ரயில் பாதை சீரமைப்பு பணி முடியவில்லை. கோவையில் இருந்து சரியான நேரத்திற்கு ரயில்கள் இயங்குவதில்லை. ரயில்கள் தினமும்  கால தாமதமாக வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது. கோவை ரயில் நிலையத்தில், ரயில் பாதையில் மனித கழிவுகளை அகற்ற போதுமான  வடிகால் வசதி அமைக்கப்படவில்லை. ரயில் பாதையில் உள்ள கழிவுகளை அகற்ற வாலாங்குளத்தில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது. தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீரை கழிவுகளை அகற்ற பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கழிவுகள்  வெளியேறாமல் பல இடங்களில் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. பிளாட்பாரத்திற்குள் செல்லும் பாைதகளில் மழைக்காலங்களில் நீர் புகுந்து விடுகிறது. இவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 கூட்ஷெட் ரோட்டில் இருந்து கோவை ரயில் நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி கிடையாது. பார்சல் அலுவலக கட்டடம் இடிந்து விழுந்த பின்னர், புதிதாக கட்டடம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  பார்க்கிங் ஏரியா பகுதியில் தற்காலிகமாக பார்சல் பிரிவு செயல்படுகிறது. ரயில் நிலைய வளாகத்தில் ரயில்கள் நிறுத்த போதுமான இடவசதி இல்லாததால் சில ரயில் பெட்டிகள் போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. ரயில்  பெட்டிகளை சுத்தம் செய்யும் இடத்திலும் இடப்பற்றாக்குறை நீடிக்கிறது. ரயில் நிலையத்தின் பிளாட்பார நீர் குழாய்களில், ஆழ்குழாய் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில், பல ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில்  நிலையத்தில், பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு, கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. மேம்பாட்டு பணிகளும் நடக்கவில்லை.

 இதுபற்றி கோவை ரயில் பயணிகள் கூறியதாவது: தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் கோவை ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். பயணிகளின் வாகனங்கள் நிறுத்த இடவசதி கிைடயாது. ஒரு ரயில்  வந்தால்கூட, பயணிகள் நெரிசல் காரணமாக, ஸ்டேட் பாங்க் ரோடு, கூட்ஷெட் ரோடு ஸ்தம்பித்து விடுகிறது. ரயில் நிலையம் அருகேயுள்ள ரோட்டை விரிவாக்கம் செய்யவேண்டும். போதுமான நிலத்தை கையகப்படுத்தி ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும். தேவையில்லாத ரயில்களை கோவை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நீண்ட நாட்கள் நிறுத்தி வைக்கக்கூடாது. பயணிகள் காத்திருப்பு கூடம், தங்கும்  கூடம் அதிகரிக்கவேண்டும். தரமான குடிநீர் வழங்கவேண்டும். டிக்கெட் கவுன்டர் வளாகத்தில் பெரும் கூட்டம் குவிகிறது.

இதை தடுக்க, கூடுதல் கவுன்டர்கள் தேவை. ரயில்களின் வருகை குறித்த டிஜிட்டல் அறிவிப்பு பலகை அடிக்கடி  முடக்கப்படுகிறது. இதை, சீர்படுத்த வேண்டும். ரயில் வருகை குறித்து தெளிவான தகவல்களை பயணிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு ரயில் பயணிகள் கூறினர். தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘மத்திய ரயில்வே பட்ஜெட்டில், ஆண்டுதோறும் தென்னக ரயில்வே துறை மேம்பாட்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதோ, அதற்கு ஏற்பவே கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள்  மேற்கொள்ளப்படும். கோவை ரயில் நிலையத்துக்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால் கூடுதல் கட்டமைப்பு வசதி தேவை என மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பி உள்ளோம். படிப்படியாக கட்டமைப்பு  வசதிகள் மேம்படுத்தப்படும்’’ என்றனர்.

Tags : Coimbatore Railway Stations ,Coimbatore Railway Station , Uncontrolled Coimbatore Railway Station
× RELATED கோவை ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ விற்பனையகம்