×

சுற்றுலாத்தலங்களில் அவலம் குமரி கடற்கரைகளில் குவியும் பிளாஸ்டிக் குப்பைகள்: தடைவிதித்தும் கண்காணிப்பு கேள்விக்குறியானது

நாகர்கோவில்: குமரி மாவட்ட கடற்கரைகளில்  குவியும் பிளாஸ்டிக் குப்பைகளால் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் என மைக்ரான் குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள் படிப்படியாக பயன்பாட்டிற்கு வந்து இன்று, மனிதர்களை பிளாஸ்டிக்கின் அடிமைகளாகவே மாற்றிவிட்டது. மக்களின் சோம்பல் காரணமாக  மது மற்றும் சிகரெட்டுக்களை  விட ஆபத்தான பிளாஸ்டிக் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறிவிட்டது.
கடைக்கு செல்வதானால் துணிப்பையும், காய்கறி வாங்க வயர்கூடையும், கடைகளில் எண்ணெய் வாங்கவும், உணவகங்களில் தின்பண்டங்கள் மற்றும் குழம்பு வாங்கவும் பாத்திரங்களும் கண்ணாடி பாட்டில்களும் கொண்டு சென்ற நிலை மாறி,  தற்போது, அனைத்திற்கும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.  இவ்வாறு பயன்படுத்தி விட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மக்கவே மக்காது என்பதால், அவை விளை நிலங்களில்  அதிகளவில் படிந்து, மழை நீரை மண்ணுக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றன.

கழிவுநீர் ஒடைகளில் சிக்கி, மழைக்காலங்களில் தண்ணீர் வடியாமல் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுக்க செய்வதுடன், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகி பலவேறு நோய்களை பரப்பி வருகின்றன. பிளாஸ்டிக் கவர்களை தீயிட்டு  கொளுத்துவதால், ஏற்படும் புகை, புற்றுநோய், நுரையீரல் நோய்களை உருவாக்குகின்றன. சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகின்றன.  பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் தட்டுகளில் உண்பதால், நரம்புதளர்ச்சி, ஹார்மோன்களில் பிரச்னை போன்றவை ஏற்பட்டு வருகின்றன. திரும்பிய பக்கம் எல்லாம் பல வண்ண பிளாஸ்டிக் கவர்கள் தென்பட்ட நிலையில், இவற்றை தடுக்க கடந்த  2002ம் ஆண்டு சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும், 2009ம் ஆண்டு குமரிமாவட்டத்திலும், பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டது.
2009ம் ஆண்டு இந்த தடையை மக்கள் இயக்கமாக மாற அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

இதற்காக  மாவட்ட மாசுக்கட்டுபாட்டு அலுவலர் கிருபானந்தராஜன் தலைமையில் உள்ளாட்சி துறை,  வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டது. முன்னதாக ஒரு ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் அவர்கள் மூலம் மக்களுக்கும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், கலெக்டர் ரத்னூ மற்றும் கிருபானந்தராஜன் ஆகியோர் பணியிடம் மாற்றப்பட்ட  பின்னர்  முறையான கண்காணிப்பின்றி, மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது தமிழக அரசு கடந்தாண்டு மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் தடையை அறிவித்தது. மேலும் மெழுகு பூசப்பட்ட, கப்புகள், தட்டுகளுக்கும் தடை  விதித்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள், பைகள் தடை செய்யப்பட்டன.

உணவகங்களிலும் பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி, பேருராட்சி அதிகாரிகள் மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனை செய்து, அதனை  செல்போனில் புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப உத்தரவு இடப்பட்டது. இதனால், உணவங்களின் உரிமையாளர்களின் எதிர்ப்புகளை சமாளித்து, பிளாஸ்டிக் தடை அமல் படுத்தப்பட்டது. மத்திய அரசும் பிளாஸ்டிக்கை தடை  செய்து அறிவித்துள்ளது.
ஆனால், தற்போது நாகர்கோவில் மாநகராட்சி உள்ளிட்ட சில முக்கிய நகரங்கள் நீங்கலாக இதர பகுதிகளில் மீண்டும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பைகள் தலைகாட்ட தொடங்கி உள்ளன. உள்ளாட்சி அதிகாரிகளுக்கு பயந்து நீர்நிலைகளில்  கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கழிவுநீர் கால்வாய்கள் மூலம் ஆற்றிலும்,  ஆறுகள் மூலம் கடலிலும் கலந்து வருகின்றன.

இதனால், கடற்கரைகள் நிலத்தை விட பிளாஸ்டிக் கழிவுகளால் அபாய நிலையை சந்தித்து வருகின்றன. இதனால், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மீன் வளம் குறையும் அபாயகரமான சூழலும் எழுந்துள்ளது. நிலத்தை விட நீரில்தான் பிளாஸ்டிக் அபாயம் அதிகம் உள்ளது. உலகம் முழுவதும் கடலில் ஒரு நிமிடத்திற்கு ஒரு லாரி குப்பைகள் கலக்கின்றன. இதனால் ஆண்டிற்கு 80 லட்சம் டன் வீதம் இதுவரை 15 கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகள்  கடலில் கொட்டப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதுபோன்ற பிளாஸ்டிக் குப்பைகள் காரணமாக கடலில் பல பிளாஸ்டிக் தீவுகள் உருவாகி உள்ளன. இவை இலங்கையை விட பல மடங்கு பெரிதான, பல ஆயிரம் கி.மீ சுற்றளவு  உடையவையாக உள்ளன.

ஒரு சதுர கி.மீ கடல் நீரில் 25 ஆயிரம் மைக்ரோ நானோ பிளாஸ்டிக் துகள்கள்  உள்ளன. இவை கடலில் உள்ள லார்வாக்களின் ரத்த நாளங்களுக்குள் சென்று, அவற்றை அழிக்கின்றன. கடல் கழிமுகங்களில் காணப்படும் பிளாங்கடன் எனப்படும்  நுண்ணுயிரிகள் 70 சதவீதம் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. மேலும் பெரிய மீன்களுக்கு இரையாகும் சிறிய மீன்களின் முக்கிய உணவு இந்த நுண்ணுயிரிகளே. இந்த உயிரிகளின் நாளங்களுக்குள் நானோ பிளாஸ்டிக் துகள்கள் செல்வதால்,  இவை அழிந்து வருகின்றன. இதனால் மீன் வளமும் குறைந்து வருகிறது.எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அதன் தீமைகள் பற்றி விரிவாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் வளம், மீன்கள் அழியும்:

இன்டாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லால்மோகன் கூறியதாவது, கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மீன்கள், கடல் ஆமைகள், கடல் சிங்கம், கடல் குதிரைகள் உண்கின்றன. இதனால் இவை நோய் வாய்பட்டு இறக்கின்றன. பிளாஸ்டிக்  துகள்களை உண்ணும் சிறிய மீன்களை பெரிய மீனகள் உண்கின்றன. இந்த மீன்களை நாம் சாப்பிடும்போது, அதன் ரசாயன தாக்கம் மனிதர்களையும் பாதிக்கும். மேலும் மீன்கள் நமது பிரதான உணவு. இதனால் மீன்கள் அழியும் போது, உணவுத்  தட்டுப்பாடும் எதிர்காலத்தில் உருவாகும். கடலின் அடியில் படியும் பிளாஸ்டிக் துகள்களால்  மேல்மட்டமும் கடலடிவாரமும் பிரிக்கப்படுவதால், மேல்மட்டத்தில் உள்ள உயரினங்களுக்கு போதுமான நியூட்ரின் சத்துக்கள் கிடைக்காமாலும்,  மேல்மட்ட வெளிச்சம் கிடைக்காமல் கடலின் அடிமட்ட நிலப்பரப்பும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கடல் வளம் அழியும் அபாயம் உள்ளது. தற்போது பிளாஸ்டிக் பெருமளவு  கட்டுப்படுத்தப்பட்டாலும், ஆங்காங்கே பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு  உள்ளது. இதனை முற்றாக தடுக்க மாவட்ட நிர்வாகம் தொடர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மக்கும் உயிர்ம நெகிழி பைகள் அறிமுகம்:

பிளாஸ்டிக் கவர்கள் தடையை அடுத்து பேப்பர் பைகள் அறிமுகம் ஆகியுள்ளன. மேலும் பிளாஸ்டிக் கவர்கள் போன்றே மக்கும் தன்மையுடைய தாவர எண்ணெய், கரும்பு, சோளம் மற்றும் மாவுப் பொருட்களால் ஆன சுற்றுச்சூழலுக்கு கெடுதல்  இல்லாத நெகிழி பைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது, பெருநகரங்களை தொடர்ந்து நாகர்கோவிலிலும் ஒரு சில மால்களில் இந்த பிளாஸ்டிக் அல்லாத பிளாஸ்டிக் போன்ற மக்கும் கவர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல்,  மெழுகு பூசாத கெட்டியான தரமான கண்களை கவரும் பேப்பர் கப்புகள், கிண்ணங்களும், அலுமினிய பாயிலில் செய்யப்பட்ட கப்புகளும் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால்,  இவற்றின் விலை சற்று அதிகம். பக்க விளைவுகள், பாதிப்புகள்  இல்லை என்பது நிம்மதி.

மாற்று வழி கிடைக்கும்:

மாவட்ட மாசுக்கட்டுபாடு அலுவலர் கிருபானந்தராஜன் கூறியதாவது: பிளாஸ்டிக் கவர்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு விட்டன. எங்காவது பயன்படுத்தினால், அதுபற்றி தகவல் தெரிவித்தால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  தற்போது விற்பனைக்கு வரும் அலுமினிய கப்புகளை ஆய்வு செய்த போது, அவை முறையாகவும், கிழியாமல் இருக்க வரிசையான டிசைனுடன் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பிளாஸ்டிக்கிற்கு மாற்றுபொருட்கள் படிப்படியாக வரும். கடைகளில்  தற்போது உணவு பொட்டலமிட பயன்படுத்தும் தீங்கு ஏற்படுத்தும், இதர வகை பிளாஸ்டிக் கவர்களுக்கும் மாற்று வழி விரைவில் கண்டறிப்படும். தற்போது மழை பெய்தபோது, கழிவுநீர் கால்வாய்களில் நீர் தேங்கவில்லை. முன்பு தமிழகத்தில்,  திரும்பிய பக்கம் எல்லாம் காணப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் தற்போது காண இயலவில்லை. இது மக்கள் ஆதரவு காரணமாக சாத்தியம் ஆனது. மக்களிடம் பிளாஸ்டிக் தீமை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டதே மக்கள் ஆதரவிற்கு காரணம்.  இவ்வாறு அவர் கூறினார்.

வாட்டர் பாட்டில் அபாயம்:

நாம் கோயில் விழாக்கள், கூட்டங்கள், திருமணம் என சகல நிகழ்ச்சிகளிலும் சிறியது முதல் பெரியது வரை மினரல் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்துகிறோம். இந்த பாட்டில்களில், பிஸ்பினைல் ஏ, ஆன்டிமோனி போன்ற வேதிப்பொருள்  அதிகம் உள்ளது. இதுபோன்ற பாட்டில்கள் ஆறுகள் மூலம் கடலில் கலக்கின்றன. குறிப்பிட்ட காலகெடுவிற்குள் இந்த பாட்டிலில் உள்ள தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை இருக்கும்போது, இந்த பாட்டில்கள் ஆண்டு கணக்கில்,  நீர்நிலைகள் மற்றும் கடலில் கலந்து கிடப்பதால், இவற்றின் பிளாஸ்டிக் நானோ துகள்கள் நீரில் பரவி, கடல் வளத்ைத அழிக்கின்றன. நச்சு வாயுக்கள் உற்பத்தி ஆக இவை காரணம் ஆகின்றன. தற்போது அனைத்து சுற்றுலா தலங்களிலும்,  இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பிஸ்கட், குளிர்பானங்கள், துரித உணவுகள், தின்பண்டங்கள் பெட்டலமிட்டு வரும், பிளாஸ்டிக் கவர்களும், நீர்நிலைகள் மற்றும் கடலில் கலக்கின்றன. தண்ணீர் பாட்டில்கள் வெயிலில் மட்டுமல்ல குளிர்பதன  பெட்டியில் வைத்தாலும், ஆபத்தனாது என சூழியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Tags : Kumari ,beaches , Plastic debris accumulating on Kumari beaches: Prohibited monitoring questioned
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...