×

மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

வத்திராயிருப்பு: புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. நேற்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு ஏராளமான பக்தர்கள், தாணிப்பாறை வனத்துறை கேட்டு முன்பு குவிந்தனர். பின்னர் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாக சதுரகிரி மலைப்பகுதியில் மழை பெய்ததால், தாணிப்பாறை அடிவாரம், வழுக்கல் பாறை, அதற்கு கீழ் உள்ள பாதை வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் குடிநீர் பிரச்னை ஓரளவு தீர்ந்துள்ளது.

மேலும் தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் அருவி போல் தண்ணீர் விழும் இடத்திலும், மாங்கேணி ஓடையிலும் இறங்கி பக்தர்கள் குளித்தனர்.  மஹாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம் பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் முடிந்ததும், சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் விஸ்வநாத் செய்திருந்தார். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார், வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

Tags : moon ,darshan ,eve ,Mount Chaturragiri , Thousands visit Chaudharagiri Temple on the eve of the new moon
× RELATED விருச்சிகம்