×

முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தம்: ராமேஸ்வரத்தில் போக்குவரத்து பாதிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகரில் முக்கிய வீதிகளில்  சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  பக்தர்களும் சாலையில் நடந்து செல்வதற்கு சிரமப்பட்டனர். புரட்டாசி மாத  மஹாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று வெளியூர்களில் இருந்து ஏராளமான  வாகனங்களில் பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு புனித நீராடுவதற்கு வந்தனர்.  இதுபோல் அரசுப் பஸ் மற்றும் ரயிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  ராமேஸ்வரத்திற்கு வந்தனர். இதனால் ராமநாதசுவாமி கோயிலை சுற்றிலும்  ரதவீதிகள், சன்னதி தெரு, அக்னிதீர்த்த கடற்கரை, நடுத்தெரு, கார் பார்க்கிங்  பகுதி, ரயில்வே நிலையம், தனுஷ்கோடி, பஸ் நிலையம் செல்லும் பகுதியில்  நடந்து செல்லம் பக்தர்கள் நெருக்கடி அதிகளவில் இருந்தது.

மேலும் ராமேஸ்வரம்  பஸ் நிலையத்தில் இருந்து மேலத்தெரு, வர்த்தகன்தெரு, ரயில்வே  பீடர்ரோடு, வேர்கோடு உட்பட தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில்  சாலையின் இருபகுதியிலும் பக்தர்களின் நூற்றுக்கணக்கான வாகனங்கள்  நிறுத்தப்பட்டிருந்தன. கார்பார்க்கிங் செய்வதற்கு பல இடங்கள் ஏற்பாடு  செய்திருந்தபோதும் சாலையோரத்தில் ஏராளமான வாகனங்கள் நீண்ட நேரம்  நிறுத்தப்பட்டிருந்ததால் சாலையில் வாகனங்கள் செல்வதில் அடிக்கடி  பிரச்னைகள் ஏற்பட்டது.
முக்கிய பகுதிகளுக்கு செல்லும் ராமேஸ்வரம்  தனுஷ்கோடி சாலையில் ஒரே நேரத்தில் இருசக்கர வாகனம், ஆட்டோ, சுற்றுலா  வாகனங்கள், அரசு போக்குவரத்து கழக பஸ்கள் என அனைத்து வாகனங்களும்  சென்றதால் ஒன்றை ஒன்று கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து குளறுபடி  ஏற்பட்டது.

இதனால் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.  மேலும் நேற்று அதிகாலை துவங்கி மதியம் வரை சாலையில் வாகனங்கள் அதிகளவில்  இடைவிடாது சென்று கொண்டிருந்ததால் பக்தர்கள் சாலையில் நடந்து செல்ல  முடியாமல் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தனர். ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள்  இருக்கும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி சாலையில் இரண்டு  பக்கமும் அதிகளவில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும்,  சாலையோரத்தில் இரண்டு பக்கமும் ஏராளமான வாகனங்கள் மணிக்கணக்கில்  நிறுத்தப்பட்டதாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு போலீசார் திணறினர்.  ராமேஸ்வரம் கோயில் திருவிழாக்கள், அமாவாசை போன்ற முக்கிய நாட்கள் மற்றும்  பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா  பயணிகள், பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில்  வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களும் அதிகரித்து வருவதால் வரும்  நாட்களிலாவது வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தகுந்தவாறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள்  வலியறுத்தியுள்ளனர்.

வழக்கமாக விடுமுறை நாட்களில் பாம்பன்  சாலைப்பாலத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு  பாலத்தில் இறங்கி பார்வையிடுவர். நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள்  ராமேஸ்வரம் வந்த நிலையில் பாலத்தில் வாகனங்கள் நிறுத்த  அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் மட்டும் பாலத்தில் நடந்து சென்று  நடைபாதை மேடையில் நின்று தீவுகளை பார்வையிட்டதுடன், ரயில் பாலம்  திறக்கப்பட்டு பார்ஜர் மிதவைகப்பல் மற்றும் மீன்பிடிப்படகுகள் பாலத்தை  கடந்து சென்றதையும் பார்த்து ரசித்தனர்.

Tags : Rameswaram ,roads , Parking on major roads: Impact of traffic on Rameswaram
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...