×

பயிற்சி ஆட்டம் டிரா

விசாகப்பட்டினம்: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் - தென் ஆப்ரிக்கா மோதிய 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. விஜயநகரம் ஆந்திர கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. 2ம் நாளில் டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்திருந்தது (50 ஓவர்). மார்க்ராம் 100 ரன், ஹம்சா 22  ரன் எடுத்தனர். கடைசி நாளான நேற்று தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 279 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பிலேண்டர் 48 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பவுமா 87 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வாரியத் தலைவர் அணி பந்துவீச்சில் தர்மேந்திரசிங் ஜடேஜா 3, போரெல், உமேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வாரியத் தலைவர் லெவன் 64 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய கேப்டன் ரோகித் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அகர்வால் 39, பாஞ்ச்சால் 60, கே.எஸ்.பரத் 71 ரன் (57 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர். சித்தேஷ் லாட் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மகராஜ் 3, பிலேண்டர் 2, ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது.


Tags : Training Atom Draw
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.