காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கிச்சூடு ஹிஸ்புல் தளபதி உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர் வீரமரணம்

ராம்பன்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதின் தளபதி உள்பட  3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்தார்.  

காஷ்மீரின்  ராம்பன் மாவட்டத்தில் உள்ள பதோத் கிராமத்துக்கு அருகே நேற்று காலை 7.30  மணி அளவில் அரசு பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. ஜம்மு-கிஷ்த்வார் தேசிய  நெடுஞ்சாலையில் சென்றபோது துப்பாக்கி  வைத்திருந்த 2 நபர்கள் பஸ்சை நிறுத்துமாறு கைக்காட்டி உள்ளனர். ஆனால்,  சுதாரித்த டிரைவர், பஸ்சை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்  சென்று அருகேயுள்ள ராணுவ செக்போஸ்ட்டில், அந்த  நபர்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

 உடனடியாக ராணுவத்தின்  அதிரடிப்படை அப்பகுதிக்கு விரைந்தது. அங்கு ராணுவ வீரர்களை பார்த்ததும்,  சிலர், கையெறி குண்டுகளை வீரர்கள் மீது வீசியும், துப்பாக்கியாலும் சுட்டுவிட்டு கிராமத்துக்குள் தப்பி ஓடிவிட்டனர்.  உடனடியாக கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு, அப்பகுதி சுற்றி  வளைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த அவர்கள் ஒரு வீட்டுக்குள் புகுந்தனர். அவர்களை ராணுவம் உள்ளிட்ட கூட்டுப்படை விரட்டி சென்றது. அப்போது வீட்டின் உரிமையாளரை பணயக்கைதிகளாக பிடித்து தப்ப முயன்ற தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டுகொன்றனர். 9 மணிநேரம் நடந்த இந்த மோதலில் பாதுகாப்பு படைவீரர் ஒருவரும் உயிரிழந்தார். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். வீட்டின் உரிமையாளர் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த தாக்குதலில் இறந்த தீவிரவாதி ஹிஸ்புல் முஜாகிதின் இயக்க தளபதி ஒசாமா மற்றும் அவரது கூட்டாளிகள் ஜாகித் மற்றும் பரூக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related Stories: