×

காஷ்மீர் 370வது சட்டம் ரத்து வழக்கு உச்ச நீதிமன்ற புதிய அரசியல் சாசன அமர்வு நாளை மறுநாள் விசாரணை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்தின் புதிய அரசியல் சாசன அமர்வில் நாளை மறுநாள் (அக்டோபர் 1ம் தேதி) விசாரணை மேற்கொள்ளப்படும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனியஸ்ட் கட்சியின் சீத்தாரம் யெச்சூரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து மேற்கண்ட அனைத்து மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் 370வது சட்டம் ரத்து என்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, அதேபோல் ஆட்கொணர்வு மனு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி கடந்த 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது.  இந்த நிலையில் உச்ச நீதிமன்ற அலுவலகத்தில் இருந்து நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த 370வது சட்டத்தை ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களையும் அக்டோபர் 1ம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனத்தின் புதிய அமர்வு விசாரணை மேற்கொள்ளும் என்றும், அதில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் எஸ்கே.கவுல், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகிய ஐந்து நீதிபதிகள் இடம்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,Constitutional Session , Kashmir, repeal of Article 370, Supreme Court
× RELATED உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்க முடியாது