வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் அக்.1 முதல் அவசர கட்டுப்பாட்டு அறை : 3 ஷிப்டுகளாக ஊழியர்கள் பணியில் நியமனம்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் அக்.1ம் தேதி முதல் அவசர கட்டுப்பாட்டு அறை திறக்கப்படவுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 62 ஆயிரம் கி.மீ நீள சாலைகள் உள்ளது. இந்த சாலைகளின் பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணி அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிது. இந்த நிலையில் பருவமழை காலகட்டங்களில் சாலைகளில் மரம் விழுந்தாலோ, சாலை சேதமடைந்தாலோ தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அக்டோபர் 1ம் தேதி முதல் கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தில் அவசர கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

அந்த கட்டுபாட்டு அறை அனைத்து கோட்ட அலுவலகங்கள் உடன் இணைக்கப்படுகிறது. அந்த கட்டுபாட்டு அறையில் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டாலோ அங்கு உடனடியாக தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.இதற்காக, நெடுஞ்சாலைத்துறையில் ஷிப்ட் அடிப்படையில் பொறியாளர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதாவது காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும், இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரையும் 3 ஷிப்டுகளாக பொறியாளர்கள், ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அவர்கள் சாலைகளில் திடீரென போக்குவரத்து தடை ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, நெடுஞ்சாலைத்துறை கட்டுபாட்டில் 62 ஆயிரம் கி.மீ நீள சாலைகள் உள்ளது. இந்த சாலைகளில் மரங்கள் விழுந்தாலோ, சாலைகளில் திடீரென பள்ளம் ஏற்பட்டாலோ, பாலங்களில் சேதம் ஏற்பட்டாலோ அவை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் முழுக்க, முழுக்க பராமரிப்பு நிதியின் மூலம் தான் நடக்கிறது. தற்போது சாலைகளில் பள்ளத்தை பேஜ் வொர்க் மூலம் சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், புதிதாக சாலை போடும் பணிகளையும் அக்டோபர் முதல் வாரத்திற்கு முன்பு முடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: