×

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நாளை பங்கேற்பு

சென்னை: சென்னை ஐஐடியில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு  விழா ஜூலை 19ம் தேதி நடைபெற இருந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் வர முடியாத சூழலால் பட்டமளிப்பு விழா தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐஐடி பட்டமளிப்பு விழா செப்டம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளதாக ஐஐடி நிர்வாகம் அறிவித்தது. அதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேச உள்ளார். இதுதொடர்பாக ஐஐடி நிர்வாகம் இணையதளத்தில் பட்டமளிப்பு விழா தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழாவுக்காக காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, சாலை வழி பயணத்தை தவிர்த்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி வளாகத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பிற்பகலில் பிரதமர் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, ஐஐடி வளாகத்தில் இதற்காக பிரத்யேக ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றபின் சென்னைக்கு மோடி வருவது குறிப்பிடத்தக்கது.  பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை வரும் பிரதமரிடம் தமிழக அரசு சார்பில் நினைவூட்டல் கடிதம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தமிழகத்துக்கான திட்டங்கள், நதிநீர் பங்கீட்டு பிரச்னைகள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் அந்த நினைவூட்டல் கடிதத்தில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

Tags : graduation ceremony ,IIT , PM ,attend IIT graduation ceremony
× RELATED எஸ்.எம்.பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா