×

பெருகிவரும் வாகன புகையால் ஏற்படும் மாசை போக்க சோலார் சைக்கிள் உருவாக்கிய மயக்க மருந்து டெக்னீசியன்

வேலூர்: பெருகிவரும் வாகன புகையால் ஏற்படும் மாசை போக்கும் வகையில் சோலார் சைக்கிளை வேலூரை சேர்ந்த மயக்க மருந்து டெக்னீசியன் உருவாக்கி அசத்தி உள்ளார். வேலூர் அக்ராவரத்தை சேர்ந்தவர் ராஜன் சார்லஸ். இவர் கணினி மென்பொருள் படிப்பை முடித்துவிட்டு, தற்போது வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து பிரிவு தொழில்நுட்பவியலாளராக பணியாற்றி வருகிறார். சிறு வயது முதலே அறிவியல் கண்டுபிடிப்பு, படைப்புகள் மீது ஆர்வம் கொண்ட இவர் பள்ளி பருவத்தில் பல அறிவியல் சாதனங்களை உருவாக்கியுள்ளார். பின்னர் அறிவியல் படைப்பு மீதும், பொறியியல் துறை மீதும் உள்ள ஆர்வத்தால் பணி விடுமுறை நாட்களில் பல அறிவியல் சாதனங்களை உருவாக்கியுள்ளார். அந்த வகையில் அதிகமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பெருக்கத்தால் அதிக எரிபொருள் செலவாவது மட்டுமின்றி அதில் இருந்து வெளியேறும் புகை சுற்றுச்சூழல் பாதிப்பில் பெரும்பங்கு வகிக்கிறது. இது பின்வரும் காலங்களில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பதால் மாசுபாட்டை தடுப்பதில் நாம் முனைப்பு காட்ட வேண்டிய பொறுப்பை உணர்ந்த ராஜன் சார்லஸ் தனது சொந்த முயற்சியால் சூரிய ஒளி ஆற்றல் மூலம் இயங்கும் சைக்கிளை உருவாக்கி அசத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போதைய காலக்கட்டத்தில் நாம் அனைவரும் சின்ன சின்ன வேலைகளுக்கு கூட அதிகமாக வாகனங்களை பயன்படுத்துகிறோம். இதனால் காற்று அதிகம் மாசடைந்து வருகிறது. இதனால் காற்று மாசுபடாதவாறு இருக்க ஒரு இரு சக்கர வாகனத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன்படி  தற்போது சூரிய ஒளி ஆற்றல் மூலம் இயங்கும் சைக்கிளை உருவாக்கியுள்ளேன். இந்த சைக்கிள் உருவாக்க எனக்கு 3 மாதங்கள் ஆகியது. இடையில் 3 முறை தோல்வியை சந்தித்தேன். பணிகளுக்கு இடையில் விடுமுறை நாட்களிலேயே  இதை தனியாக செய்து முடித்தேன். ஆனால் தற்போது 2 அல்லது 3 நாட்களில் இதை என்னால் உருவாக்க முடியும். நான் உருவாக்கியுள்ள சூரிய ஆற்றல் சைக்கிளில் ஒரு முறை பேட்டரி நிரம்பினால் 30 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். அதேபோல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை செல்ல முடியும்.

மேலும் பயணத்தின் போதும் சூரிய ஆற்றல் கிடைத்தால் அதன் மூலம் தொடர்ந்து இயங்கும். இதை செய்து முடிக்க சைக்கிள், மோட்டார், பேட்டரி, ஒயர் மற்றும் இதர வகையில் எனக்கு ₹30 ஆயிரம் வரை பணம் செலவானது.  ஏதாவது ஒரு நிறுவனம் எனக்கு ஸ்பான்சர் வழங்கும் பட்சத்தில் அதிக எண்ணிக்கையிலான வண்டிகளை உருவாக்கும் போது குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்க வாய்ப்புள்ளது. இது போன்ற வாகனங்களை சின்ன சின்ன வேலைகளுக்கும், குறைந்த தூரத்தில் பணிக்கு செல்வதற்கும் பயன்படுத்தினால் எரிபொருள் மிச்சமாவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் ஒரு சிறிய பொம்மை பேருந்தையும் உருவாக்கி உள்ளேன். இனிவரும் காலங்களில் காற்று மாசை தடுக்க கார், பஸ் (பேருந்து) போன்ற வாகனங்களையும் சூரிய ஆற்றல் மூலம் இயக்க நான் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.


Tags : Anesthesia Technician , Solar Cycle ,Developed by Anesthesia Technician
× RELATED சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும்...