×

ஜிஎஸ்டி வரியால் கடும் நெருக்கடி பின்னலாடை தொழிலுக்கு பின்னடைவு : ஏற்றுமதி 15% சரிவு

கோவை: ஜி.எஸ்.டி வரியால் திருப்பூர் பின்னலாடை தொழில் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இத்தொழில் நலிவடைந்து வருவதால், ஏற்றுமதியில் 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கும், திருப்பூர் பின்னலாடை தயாரிப்பு செல்கிறது. இதனால், அந்நிய செலாவணி அதிகம் ஈட்டப்படுகிறது. முந்தைய மத்திய அரசால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதிக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால், இத்துறை நன்கு வளர்ச்சியை எட்டியது. இதற்கிடையில், சாய ஆலைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகக்கூறி, கடந்த 2010-ம் ஆண்டில் 826 சாயத்தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அன்று முதல் திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. பணம் மதிப்பிழப்பு மற்றும் அதைத்தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி, இத்துறையை நிலைகுலைய செய்துவிட்டது.

நீண்ட காலமாக ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ‘டிராபேக்’ உட்பட சலுகைகளை மத்திய பா.ஜ அரசு ரத்து செய்தது. இதுவும், இத்தொழிலுக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கியது. மத்திய அரசின் சலுகைகளை எதிர்நோக்கி, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியை ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடியாக உயர்த்துவோம் என திருப்பூர் தொழில்துறையினர் அறிவித்தனர். ஆனால், இன்று ஏற்றுமதி 15 சதவீதம் சரிந்து விட்டது.
 ஆயத்த ஆடை ஏற்றுமதியில், உலகளாவிய பங்கில், இந்தியாவின் பங்கு 3.8 சதவீதம் ஆகும். இந்தியாவின் ஒட்டுமொத்த பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூரின் பங்கு 48 சதவீதமாக உள்ளது. திருப்பூர் பின்னலாடை துறையில் கடந்த 2016-17-ம் நிதியாண்டில் ₹26 ஆயிரம் கோடி வர்த்தகம் நடந்தது. இது, 2017-18ம் நிதியாண்டில் ₹23 ஆயிரம் கோடியாக குறைந்துவிட்டது.

ஜி.எஸ்.டி. அமலுக்கு பிறகு, ஏற்றுமதிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் 5 முதல் 7 சதவீதம் வரை ரத்து செய்யப்பட்டு விட்டன. ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு, ஏற்றுமதி சலுகை ரத்து உள்ளிட்ட காரணங்களால், பின்னலாடை ஏற்றுமதியில் பிற நாடுகளுடன் இந்தியா போட்டி போட முடியாத நிலையில் உள்ளது. இதனால் 85 சதவீத ஏற்றுமதி நிறுவனங்கள், உற்பத்தி திறனில் பெருமளவு குறைக்க நேரிட்டுள்ளது. இதன் காரணமாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது. பனியன் துணிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி, துணியை வெட்டிய பிறகு செஸ்ட், எம்ராய்டரிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க் தொழில்களுக்கு 18 சதவீத வரி, பின்னலாடை உற்பத்தியை சார்ந்துள்ள தையல், பிரிண்டிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு 18 சதவீதம் வரி என வரி மேல் வரி போட்டு நசுக்குவதால் இத்தொழில் நிலைகுலைந்து போயுள்ளது.  ஒரு குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் குடிசைத்தொழில் போல் தையல் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு 18 சதவீதம் வரி விதிப்பதால் தொழில் நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டனர். ஜி.எஸ்.டி. வரியால் திருப்பூர் மாவட்டத்தின் பின்னலாடை தொழில் உள்பட தொழில்துறையே முடங்கி கிடக்கிறது. வரி விதிப்பு காரணமாக, பின்னலாடை தொழிலின் சார்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 15 சதவீதம் சரிவு என்பது இனி 25 - 35 சதவீதம் வரை செல்ல நேரிடும் என்கிறார்கள் பின்னலாடை உற்பத்தியாளர்கள்.

ஏமாற்றமே மிஞ்சியது..!


பலமுனை வரிகளான விற்பனை வரி, கலால் வரி, சுங்க வரி, நுழைவு வரி மற்றும் இன்ன பிற வரிமுறைகளால்தான் நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது என்பதால், இவற்றை முற்றிலும் ஒழித்துவிட்டு அதற்கு பதிலாக ஒரே வரி முறை இருந்தால் நாட்டின் பொருளாதாரம் ஏற்றம் பெரும் என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசால் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 1ம்தேதி முதல் கொண்டுவரப்பட்டதுதான் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி முறை. ஜிஎஸ்டி வரி முறை கொண்டு வரப்பட்டால் நாடு முழுவதும் ஒரே சீரான வரி விகிதமும், பொருளுக்கான விலையும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே சீரான விலையில் இருக்கும் என்றும், இதன் முழு பயனையும் நுகர்வோர் அடையமுடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. இதனால் தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்படுவதை தன்னம்பிக்கையுடனும், மிகுந்த ஆவலுடனும் எதிர்பார்த்தனர். ஆனால், பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

Tags : Recession , Recession to Growth Crisis, Backward Industry ,GST Tax,Exports fall 15%
× RELATED உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது: நிர்மலா சீதாராமன் உரை