×

தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை பறைசாற்றிய முன்னோர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் சேகரிப்பில் அசத்திய தமிழக திருக்கோயில் குளங்கள்

வேலூர்: மழைநீர் சேகரிப்பில் பண்டைய திருக்கோயில்கள் சிறந்த கட்டமைப்புடன் விளங்கியிருந்ததை வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் சாட்சியாக உள்ளது. சனாதன தர்மத்தின் ஒவ்வொரு அம்சமும் மனிதனின் வாழ்க்கையை நேர்பட நடத்தி செல்வதை வலியுறுத்தி கூறியுள்ளன. விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் இணைத்து வழங்கி நம்மை வழிநடத்தும் நூல்கள் சமஸ்கிருதத்தில் மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களிலும் ஏராளமாக நிறைந்துள்ளன. அதோடு வசிப்பிடங்கள், இறை அனுபவத்தை தேடிச் செல்லும் திருக்கோயில்கள், திருக்கோயில்களை சார்ந்த குளங்கள், நீர்நிலைகள், அதற்கான தண்ணீர் வரும் வழிகள் என அனைத்தையும் நேர்த்தியாக கட்டமைத்தனர். மழைக்காலங்களில் இயற்கை வழங்கும் தண்ணீரை அப்படியே வீணாக்காமல் கோயில் திருக்குளங்களும், நீர்நிலைகளும் சேமிக்கப்பட்டன. அதனால்தான் அக்காலங்களில் முப்போகம் விளைந்ததுடன், யானை கட்டி போரடித்தனர் நம்மவர்கள். நீர்சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கிய நம் முன்னோர்கள் அவற்றை தொடர்ந்து பராமரிக்கும் வழிவகைகளையும் வகுத்தளித்து இருந்தனர். குடிமராமத்து என்ற பெருமைமிகு வழியையும் அவர்கள் வகுத்தளித்திருந்தனர். இவற்றை மறந்ததால்தான் தண்ணீருக்கு அண்டை மாநிலங்களிடம் கையேந்தி கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் இன்றும் மழைநீரை கச்சிதமாக சேமிக்கும் கட்டமைப்புடன் பழம்பெரும் கோயில்கள் சாட்சிகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. வேலூர் மாவட்டத்தில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வெளியில் கோட்டைக்குள்ளேயே சந்திர குளம், சிம்மக்குளம், கோயிலுக்குள் தாமரைக்குளம் இவற்றுடன் கோட்டையின் வெளியே சூரியகுளம் ஆகிய குளங்கள் அமைந்திருந்தன.
இதில் கோயிலுக்குள் ஜலகண்டேஸ்வரர் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் தாமரை குளம் மீட்டெடுக்கப்பட்டது. சிம்ம குளமும், சந்திர குளமும் காவல் பயிற்சி பள்ளி மைதானங்களாக காட்சி தந்து கொண்டுள்ளன. சூரிய குளம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி காணாமலே போனது. கோட்டையை சுற்றி அமைந்த அகழியை இப்போதுதான் தூர்வாரிக் கொண்டிருக்கிறோம். இவற்றுக்கான நீர்வரத்துக்கு அக்காலத்தில் மழைக்காலங்களில் மலைகளில் இருந்து வரும் மழைநீரும், பாலாற்றில் வரும் வெள்ளநீரும் அப்படியே அகழிக்கும், குளங்களுக்கும் சென்று சேரும். அதேபோல் இவைகள் நிரம்பி நிலையில் உபரி நீர் மீண்டும் பாலாற்றை அடையும் வகையில் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இவையெல்லாம் இப்போது தேடும் நிலையில் உள்ளன.

அதேநேரத்தில் அதே சமகாலத்தில் சம்புவராயர்களால் கட்டப்பட்டு, விஜயநகர பேரரசர்களால் மேம்படுத்தப்பட்ட விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் அமைந்துள்ள சிம்மகுளத்துக்கும், பிரம்மதீர்த்த குளத்துக்கும் மழைநீர் வடிந்து தண்ணீர் செல்லும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பது இப்போதைய தொழில்நுட்ப வல்லுனர்களையே மலைக்க வைத்திருக்கிறது. ேவலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் விரிஞ்சிபுரம் கோயிலை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் நிலையாக உள்ளதற்கு காரணம் கோயில் திருக்குளங்களே என்கின்றனர் மக்கள். இதற்காக விஜயநகர பேரரசர்கள் மழைநீர் கட்டமைப்பை கோயிலின் உள்பிரகார சுற்றில் வடிவமைத்துள்ளனர்.  ஆங்காங்கே சதுர வடிவில் துளைகளுடன் கூடிய கற்பலகையை அமைத்து அதனுடன் ஒரு மழைநீர் வடிகால்வாயை மூடியவாறு அமைத்து குளங்களுடன் இணைத்துள்ளனர். இதனால் மழைநீர் நேரடியாக  கோயிலின் உள்ளே அமைந்துள்ள சிம்ம குளத்திலும், கோயிலின் வெளிசுற்று பிரகாரத்தை ஒட்டியுள்ள பிரம்மதீர்த்த குளத்திற்க்கு செல்கிறது. இந்த கட்டமைப்பு ஏறத்தாழ 800 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதுபோல் தமிழகத்தில் காஞ்சிபுரம், தக்கோலம், கும்பகோணம் மகாமக குளம், திருவாரூர், திருவையாறு, சிதம்பரம் போன்ற நூற்றாண்டு கோயில்களில் மழைநீர் கட்டமைப்புகள் இன்றும் பயன் தருகின்றன. பெரும்பாலான கோயில்களில் இவைகள் காணாமல் போயுள்ளன. இவற்றை மீட்டெடுப்பதுடன், இவற்றுக்கான நீராதார வரத்துக்கால்வாய்களையும் கண்டுபிடித்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரல் .

நேரம் காட்டும் கல்

விரிஞ்சிபுரம் கோயிலில் விஜயநகர பேரரசர்கள் காலத்தில்  அமைக்கப்பட்ட நேரம் காட்டும் கல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.  இதுபோன்ற நேரம் காட்டும் கட்டமைப்பு கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் கோயில் மதில் சுவரில் அமைந்துள்ளது. இது ரோமானிய எண் முறையில் அமைக்கப்பட்டுள்ளதுதான் வியப்புக்குரியது. அதேநேரத்தில் விரிஞ்சிபுரம் கோயில் நேரம் காட்டும் கல்லில் உள்ள எண்கள் தற்போது புழக்கத்தில் உள்ள எண்களாகும். இதில் உள்ள துளையில் குச்சி ஒன்றை வைக்கும்போது அப்போதைய நேரத்தை துல்லியமாக காட்டும் வகையில் குச்சியின் நிழல் எண்ணின் மீது விழுகிறது.

Tags : ancestors ,pond ,rainwater harvesting ,Tamil Nadu , Ancestors proclaiming , water storage
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...