×

கட்டப்பஞ்சாயத்து இன்ஸ்பெக்டர்

நாமக்கல் காவல்நிலையத்தில் புதிதாக பொறுபேற்றுள்ள அதிகாரி, காவல்நிலையத்துக்கு வரும் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் டீல் செய்து வருகிறாராம். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக நல்லிபாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரிடம் 2.80 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட எஸ்.பி.யிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதை விசாரித்த அதிகாரி, இரு தரப்பினரையும் அழைத்து பேசினார். அப்போது, பாதிக்கப்பட்ட நபர் என்னை 6 மாதம் கத்தார் நாட்டில் ஒரு ஓட்டலில் அடைத்து வைத்து விட்டு ஊருக்கு அனுப்பி விட்டனர். வேலையும் கிடைக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை என கூறினார். இதை கட்டப்பஞ்சாயத்து பாணியில் அதிகாரி தீர்த்துவைத்தார். பாதிக்கப்பட்ட வாலிபருக்கு ஏமாற்றியவர்கள் 2 பேரும் சேர்ந்து ஒரு லட்சம் கொடுத்துவிட வேண்டும். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யமாட்டேன் என கூறி திருப்பி அனுப்பி விட்டார். ஜெயிலுக்குத்தான் போக வேண்டும் என்ற பயத்தில் வந்தவர்கள், அதிகாரியுடன் டீல் பேசிவிட்டு சென்றுவிட்டனர். இதுபோன்ற பாணியில் தான் நாமக்கல் காவல்நிலையத்தில் விசாரணை தொடர்கிறது.

மொத்தமாக அள்ளும் இன்ஸ்.

குமரி மேற்கு மாவட்டத்தில், கனிம வளத்தை குறிக்க கூடிய காவல் நிலையம் ஒன்றில், இருக்கும் அந்த அதிகாரி, தனது பெயருக்கு ஏற்ற மாதிரி, பண ஆசை அதிகமாக உள்ளவராம். தான் பொறுப்பில் இருக்கும் காவல் நிலையத்தில் தன்னை தவிர வேறு யாரும் காசு பார்த்து விடக்கூடாது. 500 ரூபாயாக இருந்தாலும், 50 ரூபாயாக இருந்தாலும் எல்லாம் எனக்கு தான் என்ற ரீதியில் செயல்படுகிறாராம். சான்றிதழ் வழங்குவதாக இருந்தால் கூட, 500 ஐ பார்த்தால் தான் கையெழுத்து போடுகிறாராம். இல்லையென்றால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கையெழுத்து போடுவதில்லையாம். விபத்தில் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்துக்கு எல்.ஐ.சி. பணம் வருவதற்கு, எப்.ஐ.ஆர். காப்பியுடன் வழங்கப்பட வேண்டிய சான்றிதழுக்கு 1000 கேட்டு, 500 வாங்கி இருக்கிறார். இதே போல் பி.எப். பண பட்டுவாடாவுக்கு, காவல் நிலையத்தில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த ஒருவர், தன் கையில் இருந்த 300 ஐ ெகாடுத்துள்ளார். ஆனால் 500 வெட்டுனா தான் விடுவேன் என்ற ரீதியில் மீதி 200 ஐ வாங்கிக் ெகாண்டு தான் அனுப்பி உள்ளார். இவர் வந்த பிறகு டீ குடிக்க கூட, கை காசு தான் செலவழிக்கிறோம். மொத்தமாக அவரே அள்ளிக்கொள்கிறார் என அந்த அதிகாரியை பற்றி வெளியில் கமெண்ட் அடிக்கும் போலீசாரும் இருக்கிறார்கள். இந்த அதிகாரிக்கு, மாமூல் வாங்கி ெகாடுக்கவே 2 புரோக்கர்களும் காவல் நிலையத்தை வட்டமடித்து வருவதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

சோதனை ரகசியத்தை கசிய விட்ட ‘உளவு’

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட சில பொருட்களின் புழக்கம் உள்ளது. அவற்றை சில சமயங்களில் சிறை அதிகாரிகள் கைப்பற்றினாலும், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க தயக்கம் காட்டுவர். ஏனெனில் உயரதிகாரிகளின் கேள்விகளுக்கு சிறை அதிகாரிகள் பதில் செல்ல வேண்டி இருக்கும். தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 2 ஆயிரத்து 800 பேர் உள்ளனர். இங்கு செல்போன்கள், சிம்கார்டுகள் நடமாட்டம் மற்றும் கஞ்சா புழக்கம் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து தென் மண்டல சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மேற்பார்வையில் உதவி போலீஸ் கமிஷனர், மூன்று இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 100 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் தம்மா துண்டு இரும்பு கம்பிகள் இரண்டு மட்டுமே கிடைத்தது. அதிர்ச்சியடைந்த உளவு துறையினர் திடீரென களத்தில் இறங்கி ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறைத்துறை உளவுப் பிரிவில் பல ஆண்டுகளாக ‘நங்கூரம்’ போட்டு வேலை பார்த்து வரும் சிறை ஊழியர்கள், கைதிகளிடம் சோதனை ரகசியத்தை முன்பே கசிய விட்டு விட்டனர். இதனால் செல்போன்கள், சிம்கார்டுகள், கஞ்சா பொட்டலங்கள் மறைக்கப்பட்டது தெரியவந்ததாம். இதனால் சோதனைக்கு சென்று போலீஸ் உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொலை, கொள்ளையா? கேமரா தேடுது போலீஸ்

மதுரை போலீசாருக்கு சமீப காலம் வரை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் செல்போன்களே பெரிதும் கை கொடுத்தன. குற்றம் இழைப்போரின் எண்ணைக் கொண்டோ, திருடிச்சென்ற செல்போனின் ‘ஐஎம்இஐ’ எண்ணைக் கொண்டோ, செல்போன் இருக்கும் ‘டவரை’ வைத்தோ குற்றவாளிகளைத் தேடி கண்டுபிடித்து விடுவார்கள். இப்போதைக்கு வழிப்பறி, கொள்ளையி–்ல் ஈடுபடுகிறவர்களில் பலரும் அதிக விலையுள்ள செல்போன்களை திருடுவதில் கவனமாக இருப்பதுடன், சொந்த எண்ணை ‘ஆஃப்’ செய்து வைத்து விட்டு, தகவல்களை அடுத்தவரிடம் ‘ஓசி செல்போன்’ வாங்கிப் பேசுவதென ரொம்பவே விழிப்புணர்வாகி விட்டார்கள். இச்சூழலில் இப்போதைக்கு கொள்ளையோ, கொலையோ, வழிப்பறியோ சம்பவப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள்தான் போலீசுக்கு கை கொடுக்கிறது. ஒருவேளை சம்பவ இடத்தில் கேமரா இல்லாமல் போனாலும், சம்பவம் நடந்த நேரத்தைக் கணித்து வைத்துக் கொண்டு, அருகாமை தெருக்கள், வீடுகளில் அல்லது அடுத்த தெருக்கள், ரோடுகளில் இருக்கிற கேமராக்களை ஆய்வு செய்தாவது குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுகின்றனர். கைரேகை குழுவினர் வருவதற்கும் முன்னதாக, சம்பவ இடத்தில் மதுரை போலீசார் முதலில் தேடுவது கேமராக்களைத்தான். எனவேதான் மதுரையில் ரோந்துப்பணி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை விட, கண்காணிப்பு கேமராக்களை அத்தனை இடத்திலும், அந்தந்த பகுதி குடியிருப்போருடன் இணைந்து பொருத்துவதிலும், இதுகுறித்த பணிகளிலுமே போலீசார் கூடுதல் கவனம் காட்டி வருகின்றனர்.


Tags : Inspector ,Buildings ,Panchayat Inspector , Panchayat Inspector
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது