×

சுஷ்மாவின் கடைசி ஆசை நிறைவேற்றினார் மகள்

புதுடெல்லி: குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வாதாடிய ஹரீஷ் சால்வேக்கு ஒரு ரூபாய் ஊதியத்தை வழங்கி, மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை அவரது மகள் பன்சூரி நிறைவேற்றி  உள்ளார்.பாகிஸ்தானில் உளவுப் பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை  அணுகியது. இதர வழக்குகளில் கோடிகளில் சம்பளம் பெறும் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, இந்த வழக்கில் இந்தியா சார்பில் வாதிட தனக்கு சம்பளமாக அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் ஒரு ரூபாய்  மட்டும் கேட்டிருந்தார்.

இந்நிலையில், சுஷ்மா சுவராஜ் எதிர்பாராதவிதமாக காலமாகிவிட்டார். தனது தாயின் ஆசையை நிறைவேற்ற சுஷ்மாவின் மகள் பன்சூரி முடிவு செய்தார். இதன்படி, ஹரீஷ் சால்வேயின் அலுவலகத்துக்கு நேரில் சென்ற பன்சூரி அவரது தாயின்  கடைசி ஆசையான ஒரு ரூபாய் ஊதியத்தை அவருக்கு வழங்கினார். இதுகுறித்து சுஷ்மாவின் கணவரும் மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சுவராஜ் கவுசல் தனது டிவிட்டர் பதிவில், `‘பன்சூரி இன்று உனது கடைசி ஆசையை  நிறைவேற்றினார். குல்பூஷண் ஜாதவ் வழக்கில் ஹரீஷ் சால்வேக்கு வழங்குவதாக நீ உறுதி அளித்துவிட்டு சென்ற, ஒரு ரூபாய் ஊதியத்தை இன்று அவரிடம் வழங்கினார்’’ என்று கூறியுள்ளார்.

Tags : Sushma , Sushma, last wish, daughter
× RELATED புதுடெல்லி மக்களவை தொகுதி பாஜ...