×

செவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயர் இடம் பெறவேண்டுமா? நாளைக்குள் பதிவு செய்ய நாசா அழைப்பு

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் மைக்ரோ சிப்பில் உங்கள் பெயர் இடம் பெற வேண்டுமானால் நாளைக்குள் உங்கள் பெயரை பதிவு செய்யுமாறு நாசா அழைப்பு விடுத்துள்ளது.  செவ்வாய் கிரகத்தின் காலநிலை,  புவியியல், மண் மாதிரிகளை சேகரித்தல் மற்றும் நுண்ணுயிரிகளின் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்வதற்காக `மார்ஸ் 2020’ என்ற விண்வெளி பயணத்திட்டத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அடுத்த ஆண்டு  செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த ஆண்டு ஜூலையில் அந்த கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ரோவர், 2021ம் ஆண்டு பிப்ரவரியில் அங்கு தரையிறங்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கு அனுப்பப்படும் ரோவரில் வைக்கப்பட உள்ள  மைக்ரோசிப்பில் உலகெங்கும் உள்ள பொதுமக்கள் பெயர்களை இடம் பெற செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இதில் உங்கள் பெயர் இடம் பெற வேண்டுமா? அதற்கு நீங்கள் நாளைக்குள்  உங்கள் பெயரை http:mars.nasa.gov/participate/send-your-name/mars2020 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுவரை 98 லட்சம் பேர் தங்கள் பெயரை செவ்வாய்கிரகத்தில் இடம் பெற பதிவு செய்துள்ளனர். இவ்வாறு  பதிவு செய்யப்படும் பெயர்களை நாசா சிலிகான் சிப்பில் பதிவு செய்து கொள்ளும். பின்னர் அடுத்த ஆண்டு அனுப்பப்படும் ரோவரில் இந்த சிப் கொண்டு செல்லப்பட்டு  செவ்வாயில் வைக்கப்படும்.

Tags : Mars ,NASA , Mars, NASA
× RELATED திருமணத்துக்குத் தடையாகும் செவ்வாய் தோஷம்