×

ஐநாவில் காஷ்மீர் பிரச்னையை பேசிய சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்

நியூயார்க்: ஐநா பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசிய சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  ஐநா பொதுச்சபையின் 74வது கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீ பேசுகையில், ‘`ஐநா சட்டம்  மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திற்கு உட்பட்டும், இருநாடுகள் இடையேயான ஒப்பந்தப்படியும் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதுவரை உள்ள நிலையில் மாற்றம் ஏற்படும் வகையில் ஒருதலைபட்சமான முடிவை  எடுக்கக் கூடாது’’ என்றார்.  ஐநா.வில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய சீனாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், ‘‘காஷ்மீர் விவகாரம் முழுக்க முழுக்க உள்நாட்டு பிரச்னை. இந்தியாவின் இறையாண்மை, எல்லை ஒருங்கிணைப்புக்கு மற்ற நாடுகள்  மதிப்பளிக்கும் என்று விரும்புகிறோம். அதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனாவும், பாகிஸ்தானும் சாலை அமைத்து வருவதையும் நிறுத்த வேண்டும்,’’ என்றார். ஐநா கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தொடர்ந்து  பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். நேற்று முன்தினமும் அவர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் லோட்டே செரிங், சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியடே ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி  பேச்சுவார்த்தை நடத்தினார் என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது.



Tags : China ,India ,Kashmir ,UN UN , UN, Kashmir, China, India, condemnation
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...