×

ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர மாணவன் உதித்சூர்யாவுக்கு 2 பேராசிரியர்கள் உதவி

* மாபியாக்களால் எனது உயிருக்கு ஆபத்து
* தேனி கல்லூரி முதல்வர் திடுக்கிடும் புகார்

தேனி:  ஆள் மாறாட்ட விவகாரத்தில் 2 பேராசிரியர்கள் உதவியதாகவும், தனது உயிருக்கு மாபியாக்களால் ஆபத்து உள்ளதாகவும் முதல்வர் ராஜேந்திரன் போலீசிடம் புகார் தெரிவித்துள்ளார். தேனி மருத்துவக்கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்த விவகாரத்தில் மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கில் கைதான  புரோக்கர் ஜார்ஜ் ஜோசப் அளித்த தகவலின்படி, ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மாணவி அபிராமி, மாணவர்கள் ராகுல், பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  தர்மபுரி அரசு மருத்துவமனையில் படித்த மாணவன் வாணியம்பாடியை சேர்ந்த இர்பான் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாணவர் உதித்சூர்யா தேனி மருத்துவக்கல்லூரியில் சேர காரணமாக இருந்தவர்கள் குறித்து விசாரித்த தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், தேனி எஸ்பி பாஸ்கரனிடம் நேற்று புகார் மனு அளித்தார்.  அதில் அவர் கூறியுள்ளதாவது: நாங்கள் கல்லூரியில் ஒரு தனிக்குழு அமைத்து ஆள்மாறாட்டத்தில் மாணவர் சேர காரணமானவர்கள் யார், யார்? ஆவணங்களை திருத்தியது யார், யார் என்பது உட்பட பல்வேறு விவரங்களை சேகரித்தோம்.  அதில் எங்கள் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் வேல்முருகன், திருவேங்கடம் ஆகியோர் முகவரிகளை திருத்தி, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ய உதவியது தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் இந்த விவகாரத்தில் அவருக்கு  ஆதரவாக செயல்பட்டுள்ளனர். தவறு செய்தவர்களின் பின்னணியில் மிகப்பெரிய ‘மாபியா’ கும்பல் இருப்பதாக எனக்கு பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. இக்கும்பலால் எனது உயிருக்கும், உடைமைக்கும் எந்த நேரமும் ஆபத்து நேரிடலாம். எனவே  பாதுகாப்பு தேவை. நானும் எனது குடும்பமும் பெரும் பதற்றத்தில் உள்ளோம் என கூறியுள்ளார்.

₹2 கோடி கேட்டு பெற்றோரிடம் மிரட்டல்:தேனியில் நேற்று கைதான 6 பேர் சார்பில் சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் விஜயகுமார், சுப்பிரமணி, சீனிவாசன், ரகுவரன் ஆகியோர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நீட் ஆள் மாறாட்ட சம்பவத்தில் கைதான மாணவர்கள் சென்னை,  ஓஎம்ஆர்-ல் செயல்பட்ட பிரிஸ்ட் மெடிக்கல் காலேஜில் ஒன்றாக படித்தவர்கள். அந்தக்கல்லூரி கடந்த வருடம் மூடப்பட்டதால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்போது நடந்து வருகிறது. நீட் விவகாரத்தில்  கைதான உதித்சூரியா, அபிராமி, பிரவீன், ராகுல் ஆகிய 4 பேரும் ஒரு ஏஜென்ட் மூலம் வெவ்வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ஒரு நபர், பெற்றோரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டி வருகிறார். இவ்வாறு அவர்கள்  கூறினர்.

Tags : professors ,Udithsuriya ,student , Transformation, Medical Studies, Student Udithsuriya, 2 Professors
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...