×

செய்யாறில் ஓட ஓட விரட்டியதால் உயிருக்கு பயந்து பஸ்சில் ஏறிய இன்ஜினியர் வெட்டிக் கொலை: பட்டப்பகலில் கும்பல் வெறிச்செயல்

செய்யாறு: செய்யாறில் பஸ்சுக்குள் ஏறிய இன்ஜினியரை சரமாரியாக வெட்டிக்கொன்று விட்டு தப்பிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்காளத்தி. இவரது மகன் சதிஷ்குமார்(28). பிஇ பட்டதாரியான இவர் பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், சதீஷ்குமாருக்கு திருமண தோஷம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் பரிகார பூஜை செய்வதற்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் செய்யாறு வேல் சோமசுந்தரம் நகரில்  வாடகை வீடு எடுத்து தங்கினர். நேற்று சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல் பெற்றோருடன் வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர், சதீஷ்குமார் காலை 11 மணியளவில் செய்யாறு பஸ்நிலையம் அருகே ஒரு  டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 10 பேர் கும்பல் அவரை வெட்ட முயன்றனர். இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து ஓடி சென்று அவ்வழியாக வந்து நின்ற தனியார் பஸ்சில் ஏறி உயிர் தப்ப முயன்றார்.

ஆனால் விரட்டி வந்த கும்பலும் பஸ்சுக்குள் ஆயுதங்களுடன் ஏறியதால், பயணிகள் அலறியடித்தபடி  இறங்கி  ஓடினர். டிரைவரின் பின்பக்க சீட்டில் பதுங்கியிருந்த சதீஷ்குமாரை, அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில்  சாய்ந்தார். பின்னர் அந்த கும்பல் காரில் தப்பி சென்றது. அதன்பிறகு சதீஷ்குமாரை பயணிகள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கும்பல் கூலிப்படையினராக இருக்கலாம் என்றும், முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Engineer ,Running Ceyyar , Ceyyaru, bus, engineer, killed
× RELATED சென்னையில் சர்வதேச தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் 3பேர் கைது..!!