×

குமுளி மலைச்சாலையில் அந்தரத்தில் தொங்கிய லாரியால் பரபரப்பு: போக்குவரத்து பாதிப்பு

கூடலூர்: குமுளி மலைச்சாலையில் டிரைவரின் கட்டப்பாட்டை இழந்து, அந்தரத்தில் தொங்கிய லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தமிழக, கேரள எல்லைப் பகுதியான குமுளிக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தேனி-கொல்லம் நெடுஞ்சாலையில் லோயர் கேம்ப்பிலிருந்து 6 கிமீ தூரத்துக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலைச்சாலையில் செல்கிறது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில், இந்த சாலையில் கோட்டயத்தில் இருந்து திருச்சிக்கு ரப்பர் லோடு ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை மதுரை குன்னத்தூரை சேர்ந்த திருப்பதியின் மகன் முனீஸ்(19) ஓட்டி வந்தார்.

குமுளி மலைச்சாலை மாதாகோவிலுக்கு மேல் உள்ள கொண்டை ஊசி வளைவில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, திடீரென வலது பக்க பள்ளத்தில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக லாரியின் சேஸ் பகுதி சாலையில் தட்டி நின்றதால் லாரி முழுவதும் பள்ளத்தில் விழாமல் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் லாரி டிரைவர் முனீஸ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த லோயர்கேம்ப் போலீசார், முதல்கட்டமாக மற்றொரு லாரியை கொண்டு வந்து, விபத்துக்குளான லாரியிலிருந்த சரக்குகளை மாற்றினர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Kumuli hill, lorry, traffic impact
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!