×

இளம்பெண் சுபஸ்ரீ பலியான வழக்கில் பேனர் வைத்த 4 பேரை சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு: சொந்த ஜாமீன் வழங்க போலீசுக்கு உத்தரவு

சென்னை: பள்ளிக்கரணையில் விளம்பர பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ பலியான வழக்கில் பேனர் வைத்த 4 பேரை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்திவிட்டார். மேலும் அவர்களுக்கு காவல் நிலையத்திலேயே சொந்த ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12ம் தேதி இளம்பெண் சுபஸ்ரீ இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதிமுகவை சேர்ந்த ஜெயகோபால் வீட்டு நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ெதாடர்புடைய ஜெயகோபால் தலைமறைவானார்.

அவரை கைது செய்ய தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருந்த ஜெயகோபாலை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். 14 நாட்கள் தலைமறைவாக இருந்து ஜெயகோபாலை நேற்று சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இன்று காலை அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் ஜெயகோபாலிடம் நடத்தி விசாரணையின் அடிப்படையில் கொடி கட்டுவது மற்றும் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழனி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமி காந்தன் ஆகியோரை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்று காலை ஆலந்தூர் நீதிமன்றம் கொண்டு வந்தனர். இதன்பிறகு வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி ஸ்டெர்லியிடம் சமர்ப்பித்தனர். ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதி, ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் 4 பேரையும் சிறையில் அடைக்க மறுத்து விட்டார். மேலும் அவர்களுக்கு காவல் நிலையத்திலியே போலீசார் சொந்த ஜாமீன் வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags : Subasree ,Magistrate ,death , Youth Subasree, banner, bail
× RELATED உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு...