×

தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளை மீட்பது மட்டுமல்ல,அதனை பாதுகாப்பதும் கடமையாகும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளை மீட்பது மட்டுமல்ல,அதனை பாதுகாப்பதும் கடமையாகும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடிக்கு நேற்று காலை 11.45 மணியளவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு நடக்கும் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகள், அகழாய்வில் கிடைத்த தொல்லியல் பொருட்களை பார்வையிட்டார். அகழாய்வு பணிகள் மற்றும் கிடைத்த பொருட்கள் குறித்து அவருக்கு தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், காப்பாட்சியர் ஆசைத்தம்பி ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது; கீழடியில் தமிழர் பண்பாட்டுப் பெருமைகளை நேரில் கண்ட பெருமித உணர்வு ஒட்டுமொத்த தமிழினத்திற்க்கானது.

கீழடியில் மேற்கொண்ட ஆய்வு தொடர்பாக உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்; கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு உடனடியாக இடம் ஒதுக்கித் தரவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சங்கத் தமிழ் காவியம் படைத்த நம் ஆருயிர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் எடுத்துக் காட்டியது போல; இலக்கியங்கள் காட்டிய தொல்தமிழர் பெருமை பற்றிய சான்றுகள் அகிலத்தார்க்கு மெய்ப்பித்திருக்கின்றன கீழடி அகழாய்வுகள். ஆண்டுகளாலும் ஆழ்ந்த அறிவாலும் உலகின் மூத்த இனம் நம் இனம் என்பதற்கான அறிய சான்றுகள் கிடைத்து வருகின்றன. கீழடியில் நான்காம்  ஆய்வினை மேற்கொண்டு வெளியிட்ட அறிக்கையினை உடனடியாகப் பாராட்டினேன்.

தொல்தமிழர் பெருமையை பறைசாற்றும் அகழாய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழர்தம் பொருள் பொதிந்த வாழ்வியல் குறித்த வரலாற்று உண்மைகள் மண்மூடி மறைக்கப்பட்டுவிடக் கூடாது. அதனால்தான் அகழாய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று கண்டறிந்து மகிழும் ஆவல் முகிழ்த்தது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிறப்பான நகர நாகரிகத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்ததை காண முடிந்தது. வைகை ஆற்றில் வாடாத நாகரிகத்தில் கிடைத்த பானை ஓடுகளில் கருப்பு - சிவப்பு நிறமும் கீறல் எழுத்துகளும் இடம் பெற்றிருந்தன. தமிழர்கள் அந்த காலத்திலேயே எழுத்தறிவு பெற்றிருந்ததை அதிகாரிகள் விளக்கினர்.

கீழடியில் ஆய்வுப் பணிகளை நிறுத்த வேண்டும் என்ற முடிவை மத்திய தொல்லியல் துறை மாற்றிக் கொள்ள வேண்டும்; ஆய்வு பணிகளை மேற்கொண்டு, தமிழர் நம் நாகரிகம் உலகறியச் செய்யத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். அந்தப் பண்பாட்டுப் பெருமைகளை மீட்பது மட்டுமல்ல; அதனைப் பாதுகாப்பதும் கடமையாகும் என அறிக்கையில் கூறியுள்ளார்.


Tags : Tamils ,Stalin , Cultural pride, duty, Stalin
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!