×

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குப்பைகளை அகற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம்: வியாபாரிகள் அறிவிப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குப்பைகளை அகற்றாவிட்டால் சாலைமறியலில் ஈடுபடுவோம் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மார்க்கெட்டாகும். இங்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, கொல்கத்தா, ஒடிசா போன்ற வெளிமாநிலங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்க்கெட் எந்தவித சுத்தமும் இல்லாமல் உள்ளது. மேலும் குடிநீர், கழிவுநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மார்க்கெட்டில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது, ‘ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனை அகற்ற கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தோம். ஆனால் இதுவரை யாரும் குப்பைகளை அகற்ற வரவில்லை. தற்போது தொடர்மழையால் மார்க்கெட் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் கூலித்தொழிலாளர்கள் பணிகளை செய்ய முடியவில்லை. இந்த மார்க்கெட்டிலிருந்து சுங்க வரி, கடை வாடகை, மார்க்கெட் வரி என வருடத்திற்கு ரூ.2 கோடி வரை நகராட்சிக்கு வரி செலுத்தப்படுகிறது. ஆனால் மார்க்கெட்டிற்கு தேவையான அடிப்படை பணிகளை கூட செய்ய மறுக்கின்றனர். எனவே மார்க்கெட்டில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் மார்க்கெட் வெளியே சாலைமறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் மார்க்கெட்டில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : road blocking ,merchants , do not remove , garbage, marketing, trash, road stir
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...