×

பழநி கோயிலுக்கு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் ‘காத்திருக்குது சவால்கள்’

பழநி: பழநி கோயில் இணை ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிக்கு பல்வேறு சவால்கள் காத்திருப்பதாக சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இதுமட்டுமின்றி தமிழகத்தில் அதிக வருமானம் வரும் கோயில்களில் முதன்மையானதும் இக்கோயிலேஆகும். இக்கோயிலின் நிர்வாகம் இதுவரை ஐஏஎஸ் அதிகாரிகளின் நிர்வாகத்தில் இருந்ததில்லை. இதனால் நிர்வாகத்தில் பல்வேறு சீர்கேடுகள் நிறைந்திருந்தன. இதனை சீர்செய்ய கோயில் நிர்வாகத்திற்கு ஐஏஎஸ் தரத்தில் அதிகாரி நியமிக்க வேண்டுமென பக்தர்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பயனாக தற்போது பழநி கோயிலுக்கு ஐஏஎஸ் அதிகாரி இணை ஆணையராக ஜெயசந்திரபாலு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பல்வேறு சவால்கள் காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அதன் விபரம்:போலி வழிகாட்டிகளை ஒழிக்கணும், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வரும் பக்தர்களிடம் விரைவில் தரிசனம் செய்து தருவதாக கூறி பணம் பறிக்கும் போலி வழிகாட்டிகள் அடிவார பகுதியில் ஏராளமாக சுற்றி திரிந்து வருகின்றனர். இவர்களில் பலர் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் எனக்கூறி கொண்டு கோயில் அதிகாரிகளை மிரட்டி தரிசனம் செய்து வைத்து பக்தர்களிடம் பணம் பறிக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக கிரிவீதி, யானைப்பாதை மற்றும் படிப்பாதைகளில் ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பக்தர்கள் நடந்து கூட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்க உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடைக்காரர்களுக்கு மாற்று இடத்தில் கடை ஒதுக்கித்தர வேண்டும்.

வருகை பதிவேடு வேண்டும்
கடந்த சில தினங்களாக மலைக்கோயில் கருவறைக்குள் செல்வோரின் விவரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடும் வாடிக்கை இல்லை என்ற தகவல் பூதாகரமாக கிளம்பி உள்ளது. பல நூறு கோடி மதிப்புள்ள நவபாஷாண சிலைக்கு அருகில் செல்பவர்களின் விவரங்கள் மற்றும் வருகைகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதற்கென தனி அதிகாரி நியமிக்க வேண்டும்.

கும்பாபிஷேக பணிகள் துவங்க வேண்டும்
பழநி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. வரும் கார்த்திகை மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இணை ஆணையர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற தாமதமாகுமா என்ற எண்ணம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே, கும்பாபிஷேக பணியை எக்காரணம் கொண்டும் தாமதம் செய்யாமல் துவக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
பழநி கோயில் நிர்வாகத்தில் உள்ள பணியிடங்களில் 50% மேல் காலியாக உள்ளன. இதனால் நிர்வாகம் முடங்கிப்போய் உள்ளது. பணியில் உள்ள ஊழியர்கள் பணி அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற வழக்குகளை சரிசெய்து காலிப்பணியிடங்களை நியாயமான நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வளர்ச்சி திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
பழநி கோயிலில் ரூபாய் 76 கோடி மதிப்பீட்டில் 2வது ரோப்கார் பணி, ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் பாலாறு அணையில் இருந்து பிரத்யேக குடிநீர் பைப்லைன் அமைக்கும் திட்டம் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற அத்தியாவசிய பணிகளை விரைந்து முடிக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரி ஜெயச்சந்திரபானு ரெட்டி தனிக்கவனம் செலுத்த வேண்டுமென பக்தர்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : IAS officer ,Palani ,Palani Temple ,officer ,IAS , Palani Temple, IAS officer, appointment, waiting, challenges
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...