×

திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு: அதிவேகமாக சென்ற கார் மோதி 40 ஆடுகள் பலி: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, அரசூர் பாரதி நகர் பஸ்நிறுத்தம் பகுதியில், சாலையை கடந்த போது, அதிவேகமாக வந்த கார் மோதியதில், 40 ஆடுகள் பலியானது. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசசூர் கிராத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(50). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்தொழிலாக சுமார் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, திருக்கோவிலூர், வடலூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆடுகளை மேய்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை, ஆடுகளை மேய்ச்சலுக்காக அரசூர் ஏரி பகுதிக்கு ஓட்டி சென்றார். பின்னர் மாலை, வழக்கம்போல், ஆடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை பாரதிநகர் பஸ் நிறுத்தம் பகுதியில், சாலையை ஆடுகள் கடக்க முயன்றன. அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஆடுகள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த 40 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. 30 ஆடுகள் காயமடைந்தது. இந்த விபத்தின் தாக்கமாக சுமார் 20 ஆடுகள் சிதறி ஓடி மாயமாகின.

இந்த விபத்தில் ஆட்டின் உரிமையாளராக சக்கரவர்த்தியும் காயமடைந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள் காயமடைந்த சக்கரவர்த்தியை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, சக்கரவர்த்தியின் உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்த தகவலின் பேரில், உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார், திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, திருநாவலூர் இன்ஸ்பெக்டர் விஜி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர்.
 
அதில், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், விபத்து ஏற்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே தியாகிஈஸ்வரன், உஷாநந்தினி, ராஜேஷ், ராமநாதன் ஆகியோர் கொண்ட கால்நடை குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். அதிவேகமாக சென்ற கார் மோதி 40 ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து ஏற்படுத்தியவர்கள் ஓபிஎஸ் உறவினர்களா?

இதனிடையே விபத்தை ஏற்படுத்தி விட்டு, தப்பியோட முயன்ற ஒரு ஆண், 2 பெண்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விபத்து ஏற்படுத்தியவர்கள் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Tags : Thiruvennayinallur ,collision , Thiruvennayinallur, car, collision, 40 goats, kills
× RELATED தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சோகம்; ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி