×

டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டும்: வாய்க்கால்கள் தூர்வாராததால் சம்பா சாகுபடி மகசூல் இலக்கை அடையுமா?: விவசாயிகள் கவலை

வலங்கைமான்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி இலக்கை அடையலாம் ஆனால் வடிவாய்க்கால்கள் தூர்வாராததால் மகசூல் இலக்கை அடையுமா என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங்கும் மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாகவும், கர்நாடகாவிலிருந்து உரிய தண்ணீரை தமிழகஅரசு கேட்டு பெறாததாலும் 8 ஆண்டுகளாக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக குறுவை, தாளடி, சம்பா என மூன்று போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்த டெல்டாவில் தற்போது ஒருபோக சம்பா சாகுபடியே மிகுந்த போராட்டத்திற்கு இடையே நடைபெற்று வந்தது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதாலும், பாசன ஆறுகள் வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததாலும், வடகிழக்கு பருவமழை காலதாமதமாக துவங்கியதாலும் சம்பா சாகுபடியை உரித்த நேரத்தில் துவங்குவதற்கு கடந்த சில ஆண்டுகளாக டெல்டா விவசாயிகளுக்கு வாய்ப்பில்லாமல் போனது.
இந்நிலையில் கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அதனால் அணைகளில் இருந்து சுமார் மூன்று லட்சம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்து.
 
இதையடுத்து கடந்த 23ம் தேதி நாற்பது அடிக்கும் குறைவாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அதனையடுத்து கடந்த 13ம்தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியாக இருந்தபோது டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தமிழக முதல்வர் அணையை திறந்து வைத்தார்.மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டவுடன் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளை நேரடிவிதைப்பு, இயந்திர நடவு, கை நடவு ஆகிய முறைகளில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சம்பா சாகுபடிக்கு நேரடி விதைப்பு சுமார் 5ஆயிரம் ஹெக்டேரில் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று குறுவை அறுவடைக்கு பின் 4 ஆயிரத்து 241 தாளடி சாகுபடிபணிகள் மேற்கொள்ள விதைவிடபட்ட நிலையில் தாளடி நடவுபணியும் நடைபெற்று வருகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக தற்போதைய அரசு பாசனஆறு, வாய்க்கால்கள், வடிகால் ஆறு, வடிவாய்க்கால்களை தூர்வாருவதில் போதிய கவனம் செலுத்தவில்லை.ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தில் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அடுத்த நிதி ஆண்டின் தொடக்க மாதமான ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்ட பாசன மற்றும் வடிகால் ஆறுகள் வாய்க்கால்களை தூர்வாருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இம்முறை நடைமுறையில் இல்லை.இந்நிலையில் இந்த ஆண்டு முதலமைச்சரின் குடிமராமரத்து திட்டத்தின் கீழ் காலதாமதமாக சில இடங்களில் பாசனவாய்க்கால்களை தூர்வாரியுள்ளது. அவையும் பல இடங்களில் பெயரளவில் அளவீட்டுமுறை பின்பற்றப்படாமல் அவசர கதியில் தூர்வாரப்பட்டது. காலதாமதமாக பணிகள் நடைபெற அரசு அனுமதி அளித்ததால் சில இடங்களில் பணிகள் துவங்காமலும், சில இடங்களில் பணிகள் முடிவுறாமலும் உள்ளது.

பாசனஆறுகள் மற்றும் வாய்க்கால்களை தலைப்பிலிருந்தும், வடிகால் ஆறுகள் மற்றும் வடிவாய்கால்கள் கடைசியிலிருந்து தூர்வாரப்படும் குறைந்த பட்ச நடைமுறையை கூட பொதுப்பணித்துறை பின்பற்றவில்லை.வலங்கைமான் அடுத்த முக்கிய பாசன மற்றும் வடிகால் ஆறான சுள்ளன் ஆறு கடந்த 10 வருடங்களுக்கு பின் இந்த ஆண்டு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சுள்ளன் ஆறு மூலம் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பாசனவசதி பெறுவதை போல் குடமுருட்டி ஆறுக்கும், வெட்டாறுக்கும் இடையே உள்ள சுமார் பத்தாயிரம் ஏக்கருக்கு முக்கிய வடிகால் ஆக சுள்ளன் ஆறு உள்ளது. பணிகள் மிக காலதாமதமாக துவங்கப்பட்டதால் பணிகள் முழுமையடையவில்லை. குளக்குடி ரெகுலேட்டருக்கு மேற்கே சுமார்7 கிமீ தூரம் தூர்வாரப்படவில்லை. அதே போல் நரசிங்கமங்கலம் ரெகுலேட்டரிலிருந்து வெட்டாற்றில் சுள்ளன் ஆறுமுடியும் இடம் வரையிலான சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்படவில்லை.
 
இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வடிவதில் கடந்த பத்து ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் சிக்கல் நீடிக்கிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் எந்த வடிவாய்க்கால்களும் தூர்வாரப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகள் மேற்கொள்ள பாசன ஆறுகள் வாய்க்கால்கள் எவ்வளவு முக்கியமோ அதே போன்று வடிகால் ஆறு, வடிவாய்க்கால்களும் முக்கியமாகும்.இந்நிலையில் தென்மேற்கு பருவமழை போன்று வடகிழக்கு பருவமழை குறைந்த நாட்களில் அதிக அளவு பெய்யாமல் அதிக நாளில் குறைந்த அளவு மழை பெய்தால் வடிகால் ஆறு மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாராத நிலையில் மகசூல் இலக்கை அடையும். அவ்வாறு இல்லாமல் குறைந்த நாட்களில் அதிக அளவு  வடகிழக்கு பருவமழை பெய்தால் தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போகும் நிலை உருவாகும். இதனால்   டெல்டா மாவட்டங்களில் சாகுபடி இலக்கை அடையும், மகசூல் இலக்கை அடையாத நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் எந்த வடிவாய்க்கால்களும் தூர்வாரப்படவில்லை. டெல்டா  மாவட்டங்களில் சாகுபடி பணிகள் மேற்கொள்ள பாசன ஆறுகள் வாய்க்கால்கள் எவ்வளவு  முக்கியமோ அதே போன்று வடிகால் ஆறு, வடிவாய்க்கால்களும் முக்கியமாகும்.


Tags : Sewers ,District ,Open ,Delta , Delta, District, Irrigation, Water, Open
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...