×

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள்  உள்ளது. இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து  வருகின்றனர். சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில்  தற்போது விரிவுபடுத்தப்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் அதிகளவில்  வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும்  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்  துவங்கப்பட்டது. தற்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பெரும்பாலான தெருக்களில் தார்சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பெய்து வரும் மழையினால்  குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி  வருகிறது. எனவே இப்பகுதியில் தார் சாலைகள் அமைக்கும் பணிகளை விரைவில் துவங்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்து  நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை வரையில் உள்ள சாலையின்  இரு புறங்களிலும் மழை காலங்களில் தண்ணீர் செல்ல  வழியில்லாமல் விருத்தாசலம் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம் பகுதிகளில்  அதிகளவு மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது மட்டுமின்றி விருத்தாசலம் சாலை சந்திப்பில் இருந்து அரசு போக்குவரத்து  கழக பணிமனை வரை சிறிய அளவில் கழிவுநீர் வாய்க்கால் இருப்பதால்,மழைநீர் அதிகளவு ஓடும்போது அடைப்பு ஏற்பட்டு சாலையோரம் உள்ள  காவல்நிலைய வளாகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம் பகுதியில் மழைநீர்  குட்டைபோல் தேங்கி வருகிறது. இது மட்டுமின்றி மாவட்ட கல்வி அலுவலகம்,  மார்க்கெட் கமிட்டி உள்ளிட்டவற்றையொட்டியுள்ள சாலை ஓர கடைகளுக்குள் மழைநீர்  புகுந்து கட்டிடங்கள் பாதிப்படைந்து வருகிறது.

மேலும் மழைநீருடன்,  கழிவுநீர் கலந்து சாலைகளில் ஓடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து,  தற்போது நடைபெறும் சாலை விரிவுபடுத்தும் பணியுடன் சேர்த்து, சாலையின் இரண்டு புறங்களிலும் பெரிய அளவிலான கழிவுநீர் வாய்க்கால்கள்  அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் செல்ல வழிவகை ஏற்படும் என்பதால் இப்பணிகளை உடனடியாக  துவங்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Ulundurpet Ulunturpet , Ulunturpet, sewer, drain, set, must
× RELATED தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக...