×

குறுகிய பாலத்தால் தொடரும் அவலம்: சடலத்தை எடுத்து செல்ல முடியாமல் கிராம மக்கள் கடும் அவதி: மாற்றுபாதை அமைத்து தர கோரிக்கை

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் அதிகளவில் விவசாயம் மற்றும் கூலி தொழிலையே பிரதானமாக செய்து வருகின்றனர். இந்த ஊரில் ஒரு பிரிவினருக்கு என மயானம் அமைக்கப்பட்டு அதில் இறப்பவர்களை எடுத்து சென்று அவரவர்களின் வழக்கத்திற்கு ஏற்றவாறு புதைப்பது மற்றும் எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் மயானத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே தென்பெண்ணை ஆற்றிலிருந்து உபரிநீர் செல்லும் செம்மரான் கால்வாய் மீது சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள பாலம் மிகவும் குறுகிய நிலையிலும், சிதிலமடைந்த நிலையிலும் உள்ளதால் இப்பகுதி மக்கள் சடலத்தை எடுத்து செல்வதில், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் சடலத்தை எடுத்து செல்ல மாற்று வழி இல்லாததால், இப்பகுதி மக்களின் அவலநிலை தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் அந்த ஊரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்துள்ளார். அவரின் சடலத்தை தூக்கி கொண்டு குறுகிய பாலத்தின் வழியாக செல்ல அவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஏனாதிமங்கலம் கிராமத்தில் ஒரு பிரிவு மக்கள் பயன்படுத்தி வரும் குறுகிய பாலம் உள்ள பாதைக்கு மாற்றாக புதிய பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Short Bridge ,bridge , short bridge, continue, distress, detour, set quality, demand
× RELATED திருவரம்பு மாறப்பாடி பாலம் பகுதியில் பட்டுப்போன மரத்தை அகற்ற கோரிக்கை