×

பேனர் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு அக்டோபர் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பேனர் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு அக்டோபர் 11-ம் தேதி வரை  நீதிமன்ற காவல் அளித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயகோபாலை நீதிமன்ற காவலில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி சார்லி உத்தரவிட்டுள்ளார். நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ஜெயகோபாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே கடந்த 20-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் ஜெயகோபால் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக உள்ள ஜெயகோபாலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஒரு தனிப்படை கிருஷ்ணகிரி, ஒகேனக்கல் பகுதியில் தேடி வந்தது. இதனையடுத்து தலைமறைவான ஜெயகோபாலை  கிருஷ்ணகிரியில் போலீசார் நேற்று கைது செய்தனர்.

சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து ஜெயகோபாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன்பிறகு அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பேனர் வைத்த கொடி கட்டிய பழநி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த் ஆகியோரை தனிபடை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தினர். பின்னர் விசாரணைக்காக ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஜெயகோபால் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை நீதிபதி சார்லி விசாரித்தார். இந்த வழக்கை விசாரித்த பின்னர் சம்பவம் தொடர்பான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை வரும் அக்டோபர் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். பேனர் வைத்ததை தவறு என்று நீதிபதி முன்னிலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் ஒத்துக்கொண்டார்.


Tags : court ,Alandur ,AIADMK , Banner case, arrest, AIADMK, court guard, Alandur court
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...