×

பிராட்வேயில் வீட்டின் கூரை விழுந்து சிறுவன் பலியான விவகாரம் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: பிராட்வேயில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் பலியான விவகாரம் தொடர்பாக விபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. சென்னை பிராட்வே சண்முகராயன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார். கூலி தொழிலாளியான இவர், தனது குடும்பத்துடன் பிராட்வேயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் பலத்த மழை பெய்தபோது அந்த வீட்டின் மேற்கூரை இடிந்துவிழுந்தது. இதில் சுரேஷ் குமாரின் 7 வயது மகன் ஆலன் உடல் நசுங்கி பலியானான். மனைவி கலைவாணி மற்றும் மகள் ஏஞ்சல் ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி நேற்று காலை நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆஜராகி, பிராட்வேயில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.

ஏற்கனவே இந்த கட்டிடங்களை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பழைய, சிதிலமடைந்த கட்டிடங்களை இடிப்போம் என்று மாநகராட்சி உத்தரவாதம் அளித்திருந்தது. அந்த கட்டிடங்களில் இந்த சிறுவனின் குடும்பம் வசித்த கட்டிடமும் அடங்கும். ஆனால், இதுவரை அதிகாரிகள் கட்டிடத்தை இடிக்கவில்லை. அதனால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, தினகரன் நாளிதழில் வெளிவந்த செய்தியை நீதிபதிகளிடம் கொடுத்தார். இதை படித்து பார்த்த நீதிபதிகள், மனுதாக்கல் செய்யுங்கள், விசாரிக்கிறோம் என்று கூறி அனுமதி அளித்தனர்.

Tags : High Court ,house ,Broadway ,affair ,victim , Man appeals , High Court ,take action against boy's affair
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...