×

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை மீண்டும் பழைய அமர்வில் பட்டியலிட வேண்டும் : ஐகோர்ட் பதிவாளரிடம் மனுதாரர்கள் கோரிக்கை

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்விலேயே பட்டியலிடும்படி வேதாந்தா குழுமம், அரசு துறைகள், ஆட்சேபனை மனுதாரர்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளும், ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜு, பேராசிரியை பாத்திமா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளும் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வில் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 30 வரை விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே சுழற்சி முறை பணி இடமாற்றம் அடிப்படையில் நீதிபதி சிவஞானம் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். அத்துடன் ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி தாரணி அமர்வு விசாரிக்கும் என்று முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார்.

வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்க இருந்த நிலையில்,  வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட்டதால் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்விலேயே பட்டியலிடும்படி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்க முடிவெடுத்த வேதாந்தா குழுமம், இதுதொடர்பாக கோரிக்கை மனுவை தயார் செய்து, அதில் அரசு தரப்பிலும், ஆட்சேபனை மனுதாரர்கள் தரப்பிலும் சம்மதம் பெற்றுள்ளது. அனைத்து தரப்பிலும் கையெழுத்திடப்பட்டுள்ள கடிதம் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த கடிதம் பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின், ஸ்டெர்லைட் வழக்கு குறித்து அவர் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

Tags : session ,petitioners ,Sterlite ,registrar ,iGoard , Sterlite plant case ,listed again , old session
× RELATED நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்குமா?... ஓம் பிர்லா தகவல்