×

பரம்பிக்குளம்-ஆழியாறு நீர் பங்கீடு விவகாரம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்

சென்னை: “பரம்பிக்குளம்-ஆழியாறு நீர் பங்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: பரம்பிக்குளம்-ஆழியாறு நீர் பங்கீட்டு ஒப்பந்த மறு ஆய்வு குறித்த தமிழக-கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இதுகுறித்து தீர்வு காண  இரு மாநிலங்கள் சார்பிலும் 5 பேர் என 10 பேர் கொண்ட சிறப்பு பொதுக்குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் என்பது இரு மாநிலம் சம்மந்தப்பட்டது. இப்பிரச்னையில் தமிழக அரசு முடிவெடுப்பதற்கு முன்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனையை பெற்றிருக்க வேண்டும். எந்தவிதமான ஆலோசனையும் பெறாமல் இப்பிரச்னையை அணுகுவதனால் எதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது.

இதுபோன்ற ஜீவாதாரமான பிரச்னைகளில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், குறிப்பாக பரம்பிக்குளம்-ஆழியாறு பிரச்னையில் நீதிமன்றத்தை அணுகி, உரிமைக்காக போராடிய அமைப்புகளை அழைத்து கருத்துக்களை தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும்.
ஆனால், எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு தன்னிச்சையாக தமிழக முதல்வர், கேரள முதல்வரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய அச்சத்தை போக்க ஒரே தீர்வு தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, இப்பிரச்னை குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : party meeting , Decision to discuss, Parambikkulam-deep water allocation issue
× RELATED காங்கிரஸ், மற்ற கட்சிகளை விட ஆட்சி...