×

சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் 54 ஆண்டுகளுக்கு பிறகு பாலாவை பிடித்தது கம்யூ.

திருவனந்தபுரம்: கேரளாவில் பாலா தொகுதி இடைத்தேர்தலில் இடதுமுன்னணி சார்பில் போட்டியிட்ட தேசியவாத  காங்கிரஸ் வேட்பாளர் மாணி சி.காப்பன் 2,943 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார். கேரளாவில் கோட்டயம் மாவட்டம்  பாலா சட்டசபை தொகுதி 1965ல் உருவானது. அன்று  முதல் இந்த தொகுதியில் கேரள காங்கிரஸ்   (எம்) சார்பில் போட்டியிட்ட  கே.எம்.மாணி தொடர்ந்து 13 தேர்தல்களில் வெற்றி   பெற்றார். அவர் 54  வருடங்கள் தொடர்ந்து எம்எல்ஏ.வாக இருந்தார். சமீபத்தில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த   23ம் தேதி  இடைதேர்தல் நடந்தது. பாலா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜோஸ்டோம், இடதுமுன்னணி சார்பில்   தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மாணி சி. காப்பன், பாஜ  கூட்டணி சார்பில்   ஹரி உள்பட 13 பேர்  போட்டியிட்டனர். இந்த தொகுதியில்  மொத்தம் 1,79,107   வாக்காளர்கள்  உள்ளனர்.

இவர்களுக்கு 176 வாக்குப்பதிவு மையங்கள்  அமைக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. தொடங்கியது முதல் இடது    முன்னணி வேட்பாளர் மாணி சி.காப்பன் முன்னணியில் இருந்தார். காங்கிரசுக்கு    செல்வாக்கு உள்ள பஞ்சாயத்துகளில் கூட இடது முன்னணி வேட்பாளரே முன்னிலையில் இருந்தார்.  முடிவில் இடதுமுன்னணி வேட்பாளர் மாணி  சி.காப்பன் 2943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம்  54137 வாக்குகள் பெற்றிருந்தார். 2வதாக வந்த காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்  ஜோஸ்டோம் 51194 வாக்குகளும், பாஜ கூட்டணி வேட்பாளர் ஹரி 18044 வாக்குகளும்  பெற்றனர். இதையடுத்து இந்த தொகுதியை 54 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து இடதுமுன்னணி கைப்பற்றியுள்ளது.

இங்கேயும் இரட்டை இலை
கடந்த 54 வருடங்களுக்கு பின் பாலா தொகுதியில் முதன்முறையாக  இடது முன்னணி சார்பில் போட்டியிட்ட  தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த  தேர்தல்களில் கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின்  கே.எம்.மாணி தனது கட்சி சின்னமான இரட்டை இலை சின்னத்தில்  போட்டியிட்டார். இம்முறை அக்கட்சியில் கே.எம்.மாணியின் மகன் ஜோஸ்  கே.மாணிக்கும், இக்கட்சியின் செயல் தலைவர் பி.ஜே.ஜோசப்புக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கேரள காங்கிரஸ் (எம்) கட்சிக்கு இரட்டை இலை  சின்னம் கிடைக்கவில்லை. இதையடுத்து இக்கட்சியின் வேட்பாளரான ஜோஸ்டோமுக்கு  அன்னாசி பழ சின்னம் ஒதுக்கப்பட்டது. கேரள காங்கிரஸ் (எம்) கட்சியில்  ஏற்பட்ட பிளவு காரணமாக 54 வருடங்களுக்கு பின் அக்கட்சி தொகுதியை இழந்துள்ளது.

Tags : by-election ,Constituent Assembly , Legislative Assembly, by-election, Bala
× RELATED இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே...