×

கொச்சியில் விமானம் தாங்கி போர் கப்பலில் ஹார்டு டிஸ்க் மாயமான வழக்கு என்ஐஏ விசாரணை தொடக்கம்

திருவனந்தபுரம்: கொச்சியில்  இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டு வரும் விமானம் தாங்கி போர் கப்பலில்  இருந்து ரகசிய தகவல்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் மாயமானது  குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணையை தொடங்கி உள்ளது. கேரள   மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ளது. இங்கு இந்திய   கடற்படைக்கு சொந்தமான சாதாரண கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில்   முதன்முறையாக இந்திய கடற்படைக்காக விமானம் தாங்கி போர் கப்பல் தயாரிக்க   தீர்மானிக்கப்பட்டது. ரூ.25 ஆயிரம் கோடி செலவில் இக்கப்பல் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது. இப்பணியில் சுமார் 2,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போர் கப்பலில் இருந்து  கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் மாயமானது. இது தொடர்பாக கடந்த 14ம் தேதி கப்பல்  அதிகாரிகள் கொச்சி தெற்கு போலீசில் புகார் செய்தனர். அதிபாதுகாப்பு மிகுந்த  கப்பல் கட்டும் தொழிற்சாலையில் கட்டப்பட்டு வரும் போர்க்கப்பலில் உள்ள  ஹார்ட் டிஸ்க் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக  விசாரணை நடத்த டிஜிபி லோக்நாத்பெக்ரா உத்தரவிட்டார்.

இதையடுத்து  கொச்சி உதவி கமிஷனர் பிஜி ஜார்ஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.  விசாரணையில், 5 கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்குகள், மைக்ரோ பிராசசர்கள்,  ரேம்கள், கேபிள்கள், காலிங் ஸ்டேஷன் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்துள்ளது.  கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகளில் போர் கப்பலுக்கு எந்தெந்த வழியாக  செல்லலாம், கப்பலின் பாகங்கள் உள்பட மிக முக்கிய விவரங்கள் உள்ளன. இது  மாயமானது பெரும் இழப்பாகும் என டிஜிபிக்கு தாக்கல் செய்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சதி இருக்கலாமா? என்ற கோணத்தில்  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விசாரணையை  தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஏற்றுள்ளது. நேற்று முன்தினம் முதல்  என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். இக்குழுவினர் கப்பல் கட்டும்  பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags : investigation ,NIA ,Kochi Kochi ,NIA investigation , Kochi, Airplane, Shipyard, Hard Disk, NIA Investigation
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...