×

பஞ்சாப் எல்லை அருகே மற்றொரு டிரோன் மீட்பு: தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை

அட்டாரி: பஞ்சாப் மாநில எல்லை அருகே பாகிஸ்தான் அனுப்பிய மற்றொரு ஆளில்லா விமானம் (டிரோன்) மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ஆயுதம் மற்றும் வெடிபொருட்களை சப்ளை செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம், தரண் தரண் பகுதியில் பாதி எரிந்த நிலையில் டிரோன் ஒன்றை போலீசார் சில தினங்களுக்கு முன் மீட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கலிஸ்தான் ஜிந்தாபாத் படை (கேஇசட்எப்) என்ற அமைப்பினருக்கு, பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் சப்ளை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இது தொடர்பாக தரண் தரண் அருகே உள்ள சோலா சாகிம் கிராமத்தைச் சேர்ந்த பல்வந்த் சிங், அக்‌ஷதீப் சிங், ஹர்பஜன் சிங், பல்பிர் சிங் ஆகியேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய தீவிர விசாரணை மூலம் மகாவா என்ற கிராமத்தில் மற்றொரு டிரோன் விழுந்து கிடந்ததை போலீசார் மீட்டனர். இவர்களிடம் இருந்து 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், 472 தோட்டாக்கள், 4 சீன கைத்துப்பாக்கிகள், 72 தோட்டாக்கள், 9 கையெறி குண்டுகள், 5 செயற்கைகோள் போன்கள், இரண்டு வயர்லெஸ் கருவிகள், ரூ.10 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட இந்த டிரோன்கள், பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லை கிராமம் வரை 7 முதல் 8 முறை பறந்து வந்து ஆயுதங்களை போட்டு சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த டிரோன்கள் சீன தயாரிப்பு எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

காலிஸ்தான் தீவிரவாதிகள் மூலம் பஞ்சாபில் மீண்டும் வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் சதி செய்திருக்கலாம் அல்லது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்த இந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர்.


Tags : border ,Punjab ,militants , Punjab border, drone, militants, weapons supply
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...