×

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி 2.5 கோடி மோசடி செய்த 2 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

துரைப்பாக்கம்: சென்னை மேட்டுக்குப்பம் ராஜிவ் காந்தி சாலையில் தனியார் கடல்சார் வேலைவாய்ப்பு நிறுவனம் உள்ளது. இங்கிருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் கப்பல்களில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இங்கு ஜோன்ஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜோன்ஸ் வேலை செய்யும் வேலைவாய்ப்பு பிரிவில் இருந்து சில ஆவணங்களை திருடி, ராயபுரத்தை சேர்ந்த தனது நண்பர் ஜெயக்குமார் என்பவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த வேல்கண்ணன், திருப்பூரை சேர்ந்த பாண்டியராஜ், சென்னை திருவொற்றியூரை சேர்ந்த செலிக்ஸ், கடலூரை சேர்ந்த ஆதி ஆகிய 4 பேரை ஏஜென்ட்டாக போலியாக நியமனம் செய்துள்ளனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னை மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பலரிடம் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை 51 பேரிடம் 2.50 கோடி பெற்றுள்ளனர்.

ஆனால், வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த  இளைஞர்கள்  மேட்டுக்குப்பம் ராஜிவ்காந்தி சாலையில் உள்ள  கடல்சார் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்திற்கு நேரடியாக சென்று முறையிட்டுள்ளனர்.
அங்கிருந்த  நிர்வாகிகள், ‘‘ஏஜென்ட்கள் மூலம் யாரிடமும் பணம் வாங்கவில்லை. இதுபோன்ற வேலைவாய்ப்பு குறித்து விளம்பரமும் வெளியிடவில்லை’’ என தெரிவித்தனர். இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞர்கள் மோசடி  கும்பலை பிடிக்கும் வகையில் சென்னையில் தங்கி  கடந்த ஒரு மாதமாக  தேடி வந்தனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் போலி ஏஜென்ட் செலிக்ஸ் மற்றும் வேல்கண்ணன் ஆகிய இருவரை பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பிடித்து துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.  

இதுதொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த சரண் (25) என்பவர் தலைமையில் சென்னை, கன்னியாகுமரி,  தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 51 பேர் நேற்று துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

* பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த  திருமூர்த்தி என்பவரின் மகனுக்கு, பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சத்தை பெற்று மோசடி செய்த திருவொற்றியூரை சேர்ந்த  ராஜேஷ்குமார் (40), அவரது மனைவி மோனிகா (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* கோயம்பேடு குடிநீர் வாரிய வளாகத்தில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் மின்சாரம் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளி பீகாரை சேர்ந்த விபுன்குமார் (20) என்பவர், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
* திருமங்கலம் பகுதியில் தொடர்ச்சியாக பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த பாடி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (22), சுலைமான் (23),  அண்ணாநகரை சேர்ந்த மணிரத்தினம் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* பாடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, பாலியல் தொழில் நடத்தி வந்த நெற்குன்றம் ஜெயராம் நகரை சேர்ந்த பால்பாண்டி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு இளம்பெண்ணை மீட்டனர்.
* மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த திருப்பதி (45) என்பவர், நேற்று கோடம்பாக்கம் - நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி இறந்தார்.
* விருகம்பாக்கத்தில் உள்ள ஹெல்த் கேர் நிறுவனத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்த அரியலூரை சேர்ந்த விஜயலட்சுமி (19), காதல் தோல்வியால் நேற்று முன்தினம் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* சைதாப்பேட்டை பெருமாள் கோயில் ெதருவை சேர்ந்த பிரகாஷ் (30), குடும்ப தகராறில் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : fraudsters , Ship work, fraud, 2 people arrested
× RELATED 420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400...