×

ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் ஏரியானது அம்பத்தூர், திருமுல்லைவாயல், அண்ணனூர், அயப்பாக்கம் பகுதியை சுற்றி அமைந்துள்ளது. இதில், திருமுல்லைவாயல் மூன்று நகர் அருகே ஏரியை  ஆக்கிரமித்து வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதாகவும், நிலங்களை பிளாட் போட்டு விற்பதாகவும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து, அவர் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆவடி வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, சமீபத்தில் ஆவடி தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அம்பத்தூர் ஏரியில் ஆக்கிரமித்து வீடுகள், சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருவதும், எல்லை கற்களை போட்டு நிலம் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து, நேற்று ஆவடி தாலுகா மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் திருமுல்லைவாயல் வருவாய் ஆய்வாளர் செல்வராசு மற்றும் கிராம நிர்வாக அலுவலர், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு  சென்றனர். மேலும், திருமுல்லைவாயல்  இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியில் கட்டப்பட்டு இருந்த வீடுகள், சுற்றுச்சுவர், எல்லைக்கற்கள் ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்தினர். இதில், அம்பத்தூர் ஏரிக்கு சொந்தமான சுமார் 2.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 கோடி ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதுகுறித்து வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அம்பத்தூர் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள், கட்டிடங்களை கட்ட கூடாது. அவ்வாறு கட்டி இருந்தால் அவர்களாகவே முன்வந்து கட்டிடங்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் விரைவில் ஈடுபடுவோம். மேலும், நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.


Tags : Demolition ,houses ,lake ,demolition houses , Lake, demolition of houses
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...