×

சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து நாற்று நடும் போராட்டம்: திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் சகதி சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து, பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி நகர் மணலி விரைவு  இணைப்பு சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடிவதில்லை. அவசரத்திற்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ், குடிநீர் லாரி கூட வர முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாக்கியம் தலைமையில் ஏராளமான பெண்கள் சாலையை சீரமைக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து நேற்று மகாலட்சுமி நகர் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து எண்ணூர் போலீஸ் உதவி ஆணையர் உக்கிரபாண்டி,  ஆய்வாளர் புகழேந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். ஆனால், அதிகாரிகள்  நேரில் வந்து சாலை அமைக்க உறுதி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம், என்று தெரிவித்தனர். இதையடுத்து திருவொற்றியூர் மண்டல  செயற்பொறியாளர் வேலுச்சாமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : protest ,roads , Officers, Planting Struggle, Thiruvottiyur
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...