×

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரம் ஜாமீன் மனு தீர்ப்பு ஒத்திவைப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி; ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ நீதிமன்ற உத்தரவை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில்  நேற்றும் 5வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது ப.சிதம்பரம்சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக இந்திராணி முகர்ஜியை ப.சிதம்பரம் ஒருபோதும் சந்தித்தது கிடையாது.

அவர் நிதி அமைச்சராக இருந்தபோது ஒரு நாளைக்கு பல முக்கிய நபர்கள் வந்து சந்தித்து இருப்பார்கள். இதையெல்லாம் எப்படி அவர் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். குறிப்பாக இந்திராணி முகர்ஜி அவரை பார்த்தார் என்றால் அது தொடர்பாக அப்போதைய வருகை பதிவேட்டை  சோதனை செய்தால் தெரிந்துவிடும். குறிப்பாக தனது சொந்த மகளையே சுயநலத்திற்காக கொலை செய்த இந்திராணி முகர்ஜியின் அப்ரூவர் வாக்குமூலத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’’ என வாதிட்டார்.   இதையடுத்து சி.பி.ஐ சார்பில்  ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டார் துஷார் மேத்தா தனது வாதத்தில்,”இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தால் பல லட்சம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது. அவருக்கு   ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்கக்கூடும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது அவரது பணிக்காலத்தில் இருந்த வருகைப்பதிவேடு விவரங்கள் உட்பட பல தகவல்கள்  அழிக்கப்பட்டுள்ளது. மேலும் ப.சிதம்பரத்தை ஜாமீனில் விட்டால் வெளிநாடு தப்பி விடுவார் என கூறுவதில் உள்நோக்கம் ஏதும் இல்லை,’’ என்றார்.  இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Tags : P Chidambaram ,SC ,Delhi High Court , INX Media Abuse, P. Chidambaram, Delhi High Court
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி