×

சந்திரயான்-2ல் இருந்து இறங்கியபோது நிலவின் தரையில் விக்ரம் பலமாக மோதி உள்ளது: புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டது நாசா

வாஷிங்டன்: சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவ பகுதியில் பலமாக மோதி தரையிறங்கிய இடத்தை நாசாவின் எல்ஆர்ஓசி ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் கடந்த 7ம் தேதி தரையிறங்கியது. ஆனால், கடைசி நேரத்தில் அதனுடன் தகவல் தொடர்பு துண்டானது. நிலவின் தரையில் விக்ரம் லேண்டர் மெதுவாக தரையிறங்குவதற்கு பதிலாக வேகமாக மோதி தரையிறங்கியதால், அது சேதமடைந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது. இந்நிலையில், நாசாவின் எல்ஆர்ஓசி ஆர்பிட்டர் கடந்த 17ம் தேதி நிலவின் தென் துருவ பகுதியை கடந்து சென்றது.

அப்போது, விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சிம்பெலியஸ் என் மற்றும் மன்சினஸ் சி என்ற இரண்டு முகடுகளுக்கு இடையேயான சமவெளிப் பகுதியை மிகவும் அதிநவீன முறையில் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த படங்களை ஆராய்ந்ததில் விக்ரம் லேண்டர் தரையில் பலமாக மோதி தரையிறங்கியது உறுதியாகி இருக்கிறது. அதனால்தான், தரையிறங்கிய வேண்டிய இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை சென்று விழுந்துள்ளது. இது குறித்து நாசாவின் எஆர்ஓசி திட்ட துணை இயக்குனர் ஜான் கெல்லர் கூறுகையில், ‘‘நிலவின் தென்துருவ பகுதியை எல்ஆர்ஓசி ஆர்பிட்டர் கடந்த 17ம் தேதி கடந்து சென்றது. அப்போது, மாலை இருள் சூழும் நேரத்தில் எடுத்த படங்களை அனுப்பியுள்ளது.

அதை ஆராய்ந்ததில் விக்ரம் லேண்டர் தரையில் பலமாக மோதி தரையிறங்கியது தெரிய வந்துள்ளது. ஆனாலும், விக்ரம் லேண்டர் தரையிறங்கிய துல்லியமான இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எல்ஆர்ஓசி ஆர்பிட்டர் அடுத்த மாதம் 14ம் தேதி மீண்டும் தென்துருவ பகுதியை கடந்து செல்லும். அப்போது வெளிச்சம் நன்றாக இருக்கும் என்பதால், விக்ரம் லேண்டரை படம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன,’’ என்றார்.

Tags : moon ,Vikram ,NASA , Chandrayaan-2, Moon, Vikram, photo, NASA
× RELATED தமிழக – கேரள எல்லையில் கண்ணகி கோயில்...