×

காஷ்மீர் முஸ்லிம்கள் பற்றி பேசும் நீங்கள் சீனாவிடம் மட்டும் ஏன் கேள்வி கேட்பதில்லை? இம்ரான்கானுக்கு அமெரிக்கா சம்மட்டி அடி

நியூயார்க்: ‘காஷ்மீர் முஸ்லிம்களின்  தூதுவன் என கூறிக் கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன முஸ்லிம்களின் அவலநிலை குறித்து ஏன் கேள்வி கேட்பதில்லை?’ என இம்ரான் கானை அமெரிக்கா கேட்டுள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதை சர்வதேச பிரச்னையாக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சந்திக்கும் போதெல்லாம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வைக்க அழைக்கிறார். 3 முறை இம்ரான் கோரிக்கை விடுத்தும், டிரம்ப் உறுதியாக எதையும் கூறவில்லை. இதே போல மற்ற நாடுகளும் பாகிஸ்தானை கைவிட்டு விட்டன.

இவ்விவகாரத்தை ஐநா பொதுச் சபையில் தீவிரமாக முன்வைக்கும் திட்டத்துடனும் இம்ரான் உள்ளார். இதற்கிடையே, இந்தியாவுடன் போர் மூளும், காஷ்மீர் முஸ்லிம்களின் தூதுவன் நான் என அவர் பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில், நியூயார்க்கில்  அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை அமைச்சர் அலைஸ் வெல்சி நேற்று அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீர் குறித்த இம்ரான்கானின் கருத்துகள் உதவாது. தற்போதைய சூழலில், காஷ்மீர் முஸ்லிம்களின் மீது  காட்டும் அதே அளவு கவலையை, மேற்கு சீனாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் மீதும் அவர்  காட்ட வேண்டும். சீனா முழுவதும் அடக்குமுறை நிலவுவதால் அங்கிருந்து முஸ்லிம்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி வருவது குறித்து ஐநா பொதுச் சபையில் உலக நாடுகள் கவனத்திற்கு கொண்டு வர அமெரிக்கா தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது,’’ என்றார்.

முன்னதாக, நியூயார்க்கில் உள்ள இம்ரான் கானிடம், சீனாவில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவது குறித்து  கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்க மறுத்த அவர், ‘‘சீனா உடனான உறவு தனிச்சிறப்புமிக்கது என்பதால், இவ்விவகாரத்தை இரு நாடுகளும் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளும்,’’ என்றார். சீனாவில் வாழும் முஸ்லிம்கள் 5 ஆண்டுகளுக்குள், சீன கலாசாரத்துக்கு முழுமையாக மாறிவிட வேண்டுமென்று அந்த நாட்டில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, தாடி வளர்ப்பது, இஸ்லாமிய உடைகள் அணிவது, மதராசாக்களில் பாடம் படிப்பது குற்றம். ஜின்ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இன முஸ்லிம் மக்களைப் படிப்படியாக சீன கலாசாரத்துக்கு மாற, 10 லட்சம் பேர் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* சீனாவில் வாழும் முஸ்லிம்கள் 5 ஆண்டுக்குள் சீன கலாசாரத்துக்கு முழுமையாக மாற வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
* தாடி வளர்ப்பது, இஸ்லாமிய உடைகள் அணிவது, மதராசாக்களில் பாடம் படிப்பது குற்றம்.
* சீன கலாசாரத்துக்கு மாற வேண்டும் என்பதற்காக 10 லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒருவரை ஒருவர் புறக்கணித்த இந்தியா, பாக். அமைச்சர்கள்:
ஐ.நா.வில் நடந்த சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், ‘‘அனைத்து வடிவங்களிலும் தீவிரவாதம் அகற்றப்பட வேண்டியது, நல்ல ஒத்துழைப்புக்காக மட்டுமின்றி பிராந்தியத்தை காப்பதற்கும் அது அவசியமானதாகும்,’’ என்றார். இக்கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அமைச்சர்கள் ஒருவர் உரையை மற்றொருவர் புறக்கணித்தனர். ஜெய்சங்கர் உரையாற்றிய போது, பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகமது குரேஷி எழுந்து சென்று விட்டார். அதே போல், குரேஷி உரையாற்றிய போது ஜெய்சங்கர் எழுந்து சென்று விட்டார். காஷ்மீர் விவகாரத்தால் இரு அமைச்சர்களும் ஒருவரை ஒருவர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடுகளை தளர்த்த இந்தியாவுக்கு கண்டிப்பு:
காஷ்மீர் விவகாரம் குறித்து அலைஸ் வெல்ஸ் கூறுகையில், ‘‘காஷ்மீரில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் பலர் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொள்கிறது. அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் நம்புகிறோம். காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அதிபர் டிரம்ப் தயாராக இருப்பதாக ஏற்கனவே கூறிவிட்டார். அதை இந்தியா மறுத்து வருகிறது,’’ என்றார்.

ஐநா.வில் சீர்த்திருத்தம்:
ஐநா பொதுச் சபையின் 74வது கூட்டத்தின் ஒரு கட்டமாக, இந்தியா, பிரேசில், தென் அமெரிக்கா நாடுகளை கொண்ட ஐபிஎஸ்ஏ அமைப்பு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஐநா, உலக வர்த்தக அமைப்பு, ஜி20 உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும். இந்த அமைப்புகளில் அதிகப்படியான நாடுகளை சேர்ப்பதன் மூலம், அமைப்பின் செயல்பாடு மேலும் வலுவடையும். அனைத்து நாடுகளுக்கும், மக்களுக்குமான பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதிப்படுத்த முடியும்,’ என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Tags : Kashmir ,Kashmir Muslims ,United States ,China , Muslims of Kashmir, China, Imrankan, USA
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!