×

ஆறுதல் வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ் அணி?

பாஞ்ச்குலா: புரோ கபடி தொடரில் இறுதி சுற்று வாய்ப்பை இழந்து விட்ட தமிழ் தலைவாஸ் அணி இன்று குஜராத்தை மீண்டும் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. புரோ கபடியில் தொடர் தோல்விகளை சந்தித்த தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. அந்த அணி இதுவரை  18 போட்டியில் தலா 3 வெற்றி, சமன் கண்டுள்ளதுடன் 12 போட்டிகளில் தோற்றுள்ளது. கடந்த 12 போட்டியில் ஒரு வெற்றி கூட பெறவில்லை. கடைசியாக  அகமதாபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் அரியானாவின் பாஞ்ச்குலாவில் இன்று நடைபெறும் போட்டியில் மீண்டும் குஜராத் அணியுடன்  மோதுகிறது. ஏற்கனவே குஜராத்  அணியை வீழ்த்தியிருப்பதால் தலைவாஸ் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. ஆனால் அந்த நம்பிக்கை பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

காரணம் தலைவாஸ் அணியில்  மூத்த வீரர்களிடம் ஒருங்கிணைப்பு இல்லை. சிறப்பாக விளையாடும் அஜீத்குமாருக்கு அதிக வாய்ப்புகள் அளிப்பதில்லை என்ற அதிருப்தியும் எழுந்துள்ளது. சுமாராக விளையாடுகிறார் என்பதால் அஜய் தாகூரை வெளியில் உட்கார வைத்தனர்.  ஆனால், அவரை விட மோசமாக விளையாடும் ராகுல் சவுத்ரி, மஞ்சில் சில்லரை கண்டுகொள்ளவில்லை. ஏதாவது அதிசயம் நடந்தால்  மட்டுமே தமிழ் தலைவாஸ் ஆறுதல் வெற்றி பெறலாம். அதே நேரத்தில் குஜராத் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. 18 போட்டியில்  5 வெற்றி, 2 சமன், 11 தோல்வியுடன் 10வது இடத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள 4 போட்டியிலும் வென்றால் தகுதிச்சுற்று வாய்ப்பு கிடைக்கும். மற்ற அணிகளின் வெற்றி/தோல்விகளை பொறுத்தே இது முடிவாகும். இருப்பினும் ஏற்கனவே தோற்றதற்கு பழிதீர்க்கவும், தகுதிச் சுற்று வாய்பை தக்கவைக்கவும் குஜராத் முனைப்பு காட்டும்.


Tags : team ,consolation victory ,Tamil Tiwas , Tamil Thalaivas Team, Pro Kabaddi
× RELATED ஆஸி.யுடன் இன்று கடைசி ஒருநாள்: ஆறுதல் வெற்றிக்கு இந்தியா முனைப்பு