×

மார்க்ராம் அபார சதம் தெ.ஆப்ரிக்கா ரன் குவிப்பு

விசாகப்பட்டணம்: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், தொடக்க வீரர் எய்டன் மார்க்ராம் அபாரமாக சதத்தால் தென் ஆப்ரிக்கா கணிசமாக ரன் குவித்தது. இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டணத்தில் அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில் தென் ஆப்ரிக்க அணி, ரோகித் ஷர்மா தலைமையிலான கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடன் 3 நாள் போட்டியில் மோதுகிறது. விஜயநகரம் ஆந்திர கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக முழுமையாகக் கைவிடப்பட்டது. 2ம் நாளான நேற்று டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது. மார்க்ராம், எல்கர் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். எல்கர் 6 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் பாஞ்ச்சால் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த டி புருயினும் 6 ரன்னில் வெளியேறினார்.

ஓரளவு தாக்குப்பிடித்த ஸுபேர் ஹம்சா 22 ரன் எடுத்து ஆட்டமிழக்க, தென் ஆப்ரிக்கா 78 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் மார்க்ராம் - பவுமா ஜோடி பொறுப்புடன் விளையாடி 93 ரன் சேர்த்தது. மார்க்ராம் 100 ரன் (118 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஓய்வு பெற்றார் (ரிடயர்டு அவுட்). கேப்டன் டு பிளெஸ்ஸி 9 ரன்னில் வெளியேற, 2ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்துள்ளது (50 ஓவர்). பவுமா 55 ரன்னுடன் (92 பந்து, 9 பவுண்டரி) களத்தில் உள்ளார். வாரியத் தலைவர் அணி பந்துவீச்சில் தர்மேந்திரசிங் ஜடேஜா 2, போரெல், உமேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று கடைசி நாள் என்பதால் இப்போட்டி டிராவில் முடிவது உறுதி.


Tags : Markram Abara Chatham Southern Africa Run , Markram, South Africa
× RELATED சில்லிபாயின்ட்…