×

தமிழக நிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து ஐகோர்ட் உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 2015ம் ஆண்டு தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்தது. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு கொண்டு வந்த இந்தப் புதிய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பு வாதத்தில், மத்திய அரசின் சட்டத்தில் இருந்தது போன்று தமிழக அரசு கொண்டு வந்த இந்த புதிய சட்டத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் நிலங்களை கையகப்படுத்த கூடாது என்ற விதி இல்லை; நிலம் கையகப்படுத்தும் 6 மாதத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதிகள் இல்லாததும் நில உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பு வாதத்தில், “இந்தச் சட்டத்தை ரத்து செய்தால் பல கோடிக்கும் மேலான மாநில உள்கட்டமைப்பு திட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “நிலம் எடுப்பு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டம் மற்றும் அதற்கான அனைத்து அரசாணைகளும் செல்லாது என அறிவித்து தீர்ப்பளித்தது.   உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தனது வாதத்தில், “நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவால் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் முடங்கியுள்ளன என வாதிட்டார்.

எதிர் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதத்தில், “தமிழக அரசு 2015ம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தின் வாயிலாக ஆயிரக்கணக்கான வேளாண் நிலம் தேவையில்லாமல் கையகப்படுத்தப்பட்டது என வாதிட்டார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2015ஐ உயர் நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எந்த இடைக்கால தடையும் விதிக்க முடியாது. அதேபோல், ஏற்கனவே மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தற்போது நடைபெறும் திட்டங்கள் தொடர்ந்து நடக்க அனுமதி வழங்கப்படுகிறது. புதிதாக இனிமேல் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. இருப்பினும் இந்த விவகாரத்தில் அனைத்து உத்தரவுகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது’’ என தெரிவித்த நீதிபதிகள், அடுத்த விசாரணையை நவம்பர் 3வது வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,ICC , Tamil Nadu Land Acquisition Act,cannot be barred, ICC order: Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...