×

எண்ணூர் தொழிற்சாலையில் மேலும் 5 நாள் உற்பத்தி நிறுத்தம் : அசோக் லேலண்ட் அறிவிப்பு

சென்னை: வாகன விற்பனை சரிவு காரணமாக, சென்னை, எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மேலும் 5 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப்படுகிறது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளால் ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனையில் ஈடுபட்டவர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்த துறையிலும், இதை சார்ந்துள்ள பிற துறைகளிலும் வேலை இழப்பு ஏற்பட்டது. சுமார் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தொடர்ந்து 10வது மாதமாக, வாகன விற்பனை கடுமையாக சரிந்தது. 1997-98ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான சரிவு இது என ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இழப்பை ஈடுகட்டும் வகையில் வாகன உற்பத்தியாளர்கள் உற்பத்தி விடுமுறைகளை அறிவித்தனர். டீலர்களிடம் வாகனங்கள் தேங்கியதால் உற்பத்தி கணிசமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், கனரக வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம், கடந்த 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை 6 நாட்களுக்கு ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அளித்தது. இதன்பிறகு இந்த மாதம் 16 நாட்கள் விடுமுறை அறிவித்தது.

இந்நிலையில், உற்பத்தியில்லாத நாட்களை மேலும் 5 நாட்களுக்கு இந்த நிறுவனம் நீட்டிப்பு செய்துள்ளது. இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்த மாதம் 28ம் தேதி, 30ம் தேதி, அக்டோபர் 1, 8 மற்றும் 9 ஆகிய 5 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படும்’ என தெரிவித்துள்ளது. எண்ணூர் தொழிற்சாலையில் இங்கு, 1800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொடர் விடுமுறையால் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பயிற்சி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி நிரந்தர பணியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 70 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 11,135 டிரக்குகள் விற்ற நிலையில், கடந்த மாதம் 3,336 டிரக்குகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : factory ,Ashok Leyland ,Nannur ,Ennore , Ashok Leyland announces, 5 more days , production at Ennore factory
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...